778. அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம்
அம்மை யொடுந்தான் அமர்கின்ற
தணியாக் கோலம் கண்டு களிக்கத்
தகையா தெமக்கொன் றருளானேல்
மணிசேர் கண்டன் எண்தோள் உடையான்
வடபால் கனக மலைவில்லான்
பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப்
பெருமான் பிச்சைப் பெருமானே.
உரை: நீலமணி போன்ற கண்டத்தை யுடையவனும் எட்டுத் தோள்களை யுடையவனும் வடதிசைக் கண்ணுள்ள பொன்மலையை வில்லாகக் கொண்டவனும், பிணியைப் போக்குபவனும் ஆகிய திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகப்பெருமான், அழகிய வேற்படையைக் கொண்ட மகனாகிய முருகவேளும், உமையாகிய அம்மையும் தானும் வீற்றிருக்கின்ற பொலிவு குன்றாத திருக்கோலத்தைக் கண்டு மகிழத் தடையாதுமின்றி எமக்கு ஒரு காட்சி நல்கானாயின், பிச்சைப்பெருமான் என்பது தேற்றமாம். எ.று.
வேற்படை - கொல் படையாயினும், முருகப்பெருமான் கைக்கண் இருப்பது ஞானப்படையாய் அணிசெய்வது எனச் சான்றோர் கூறுதலின், “அணிவேற்படை” என்றும், அதனைப் பெற்றோர் மகிழ ஏந்துதலின், “படைகொள் மகனார்” என்றும் உரைக்கின்றார். இளைஞர் கூர்ம் படைகோடலைப் பெற்றோர் வேண்டாராக, சிவனும் உமையும் வேற்படையை விரும்பித்தந்து சிறப்பித்த குறிப்பு இதனால் புலப்படுகிறது. மகன் இடையேயிருக்க தானும் மனைவியுமாய் வீற்றிருப்பது மகப்பெற்றோர்க்கு மனம்நிறைந்த இன்பத்தையும் காண்போர்க்குக் கவினிய கண்காட்சியும் தருதலின், அது காண்டற்குரியதெனல் ஒருபாலாக, சிவனும் சிவையும் இடையே ஞானக்கொழுந்தாகிய சேயும் இருக்கும் காட்சி என்றும் குன்றாத இன்பக் காட்சியாதலால் அதனைத் “தணியாக் கோலம்” என்று வள்ளலார் சாற்றுகின்றார். தகைதல் - தடுத்தல்; மகவிடையிருக்கப் பெற்றோர் வதியும் காட்சியைப் பிறர் காணின் கண்ணேறுபடுமென்று விலக்குவது உலகத்துச்செல்வக் குடியின் சிறப்பியல்பு. அதனைக் கண்டு பயின்றிருத்தலால் சிவனும் அவ்வாறு விலக்கலாகா தென்றற்குத் “தகையாதெமக்கு ஒன்று அருள்வானாக” என்று சொல்லுகின்றார். நஞ்சுண்ட கண்டம் நீல நிறம் கொண்ட மணிபோல் ஒளிர்வது பற்றி, “மணிசேர் கண்டன்” என்கின்றார். வடக்கில் வானளாவி பனிமூடி நிற்கும் இமையவரைத் தொடரில் பொன்முடியையுடைய மலையொன்று மேருவென்ற பெயருடன் சிவனுக்குரியதென நிற்றலின், அதனை “வடபாற் கனகமலை” எனவும், அதனைத் திரிபுரம் எரிக்கச் சென்றபோது வில்லாக வளைத்துக் கொண்டதால், “கனகமலை வில்லான்” எனவும் இசைக்கின்றார். தீராவுடற் பிணியையும், தொடர்ந்து வரும் பிறவிப் பிணியையும் நீக்கவல்ல பெருமருத்துவன் சிவனாதலின், “பிணி போக்கிடுவான்” என்று பேசுகின்றார். “தீரா நோய் தீர்த்தருள வல்லான்” (புள்) என்று திருநாவுக்கரசர் உரைத்தருளுகின்றார். (5)
|