779. சூத மெறிவேல் தோன்ற லொடும்தன்
துணைவி யொடும்தான் அமர்கின்ற
காதல் கோலம் கண்டு களிப்பான்
கருதும் எமக்கொன் றருளானேல்
ஈதல் வல்லான் எல்லாம் உடையான்
இமையோர் அயன்மாற் கிறையானான்
பேதம் இல்லான் ஒற்றித் தியாகப்
பெருமான் பிச்சைப் பெருமானே.
உரை: எவ்வுயிர்க்கும் யாதும் ஈய வல்லவன், உயிர் உலகு அனைத்தையும் தனக்கு உரியவாகவுடையவன், தேவர்கள் பிரமன் திருமால் ஆகிய அனைவர்க்கும் இறைவன், உயிர்களிற் பேதம் காணாதவன் ஆகிய திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகேசப்பெருமான், மாமரத்தை எறிந்த வேற்படை யேந்தும் மகனாகிய குமரவேளும் தன் துணைவியாகிய உமையும் தானுமாக மூவரும் ஒருங்கிருக்கின்ற அன்புக் கோலத்தைக் கண்டு களித்தற்குப் பேராசை கொள்ளும் எமக்குக் காணும் வாய்ப்பொன்றை அருளானாயின், பிச்சைப் பெருமான் என்பது தேற்றமாம். எ.று.
எல்லாவுயிர்கட்கும் அறிவும் பொருளும் அளவறிந்து ஈவது இறைவன் அருட் செயலாதலின், “ஈதல் வல்லான்” என்றும், அவன்பால் இல்லாதது யாதும் இல்லையென்றற்கு “எல்லாம் உடையான்” என்றும் கூறுகின்றார். மண்ணகத்து மக்களில் நல்வினை செய்துயர்ந்தார் மறுபிறப்பில் தேவருலகத்தில் இமையவராய்ப் பிறப்பர் என்பர்; அவ்விமையவர்க்கும் அவரின் மேம்பட்ட பிரமன் திருமால் ஆகிய தேவ தேவர்கட்கும் தலைவனாதலால், “இமையோர் அயன்மாற்கு இறையானான்” என்கின்றார். தன்னையடைந்தார் யாவராயினும் வேற்றுமையின்றி அருள் வழங்கி ஆதரவு செய்வது பற்றி, “பேதம் இல்லான்” என்று இயம்புகின்றார். சூதம் - மாமரம். சூரவன்மன் போர்முடிவில் மாமரவுருக் கொண்டானாக, அதனை யுணர்ந்து வேலெறிந்து வீழ்த்தினமை பற்றி முருகனை, “சூதம் எறிவேல் தோன்றல்” என்று கூறுகின்றார். தோன்றல், இங்கே இளைஞன் என்ற பொருள் குறித்து நிற்கிறது. துணைவி - சிவனுக்குத் துணைவியாகிய உமாதேவி. அன்பு பொங்க வீற்றிருக்கும் கோலம் காதற் கோலம் எனப்படுகிறது. (6)
|