78.

    யாரையும் துணை கொண்டிலே னின்னடி
        இணை துணை யல்லானின்
    பேரை யுன்னிவாழ்ந் திடும்படி செய்வையோ
        பேதுறச் செய்வாயோ
    பாரையும் உயிர்ப் பரப்பையும் படைத்தருள்
        பகவனே யுலகேத்தும்
    சீரை யுற்றிடும் தணிகையங் கடவுணின்
        திருவுளம் அறியேனே.

உரை:

     நாடு முற்றும் துதிக்கும் சிறப்பு மிக்குள்ள தணிகைப் பதியில் எழுந்தருளும் முருகக் கடவுளே, உலகத்தையும் உயிர்த் தொகைகளையும் படைத்தளிக்கின்ற பகவனே, உன்னுடைய திருவடி யிரண்டையு மன்றி வேறு எவரையும் எனக்கு துணையாக்கொண்டிலே னாதலால் உன் திருப்பெயரையே நினைத்துக் கொண்டு வாழும்படி செய்வாயோ அல்லது உலக மயக்கத்தில் ஆழ்ந்துறச் செய்வாயோ, நின் திருவுள்ளக் குறிப்பு யாதென அறியேன், எ. று.

     தேவரும் முனிவரும் மக்களும் ஆகிய உயர்ந்தோர் புகழும் மேன்மையுடையது திருத் தணிகை என்றற்கு “உலகு ஏத்தும் சீரை யுற்றிடும் தணிகை” என்றும், சிந்தைக்கும் மொழிக்கும் எல்லை கடந்த நிலையினனாதலால் “கடவுள்” என்றும் குறிக்கின்றார். நிலவுலகையும் அதன்கண் வாழும் எண்ணிறந்த உயிர்வகையும் படைத்தளிப்பது பற்றி, “பாரையும் உயிர்ப் பரப்பையும் படைத்தருள் பகவன்” என்று கூறுகிறார். உயிர்கள் தத்தமக்குரிய உடம்பொடு கூடி உலகியல் வாழ்வாங்கு வாழ்ந்தாலன்றி உய்தி பெறலாகாமையின், அவற்றிற்கு உடம்பையும், உடம்பொடு கூடி வாழ்தற்கிடமாக உலகத்தையும் படைத்து அவற்றின் அறிவு செயல்களை எழுப்பி வாழ்விக்கின்றமை தோன்றப் “படைத்தருள் பகவனே” என்று பகர்கின்றார். பகவன் - கடவுள். முருகப் பெருமான் திருவடியல்லது நிலைத்த துணையாய் உய்தி பெற உதவுவார் பிறர் எவரும் அல்லர் என்பது தெளிய வுணர்ந்தமை புலப்பட, “நின் அடியிணை துணையல்லால் யாரையும் துணை கொண்டிலேன்” என்றும், திருவடித் துணை கொண்டு செய்வது இது வென்பார், “நின் பேரை உன்னி வாழ்கிறேன்” என்றும் உரைக்கின்றார். என் எண்ணம் இஃது எனினும், நின் திருவுள்ளக் குறிப்பு வேறாயின் பயனில்லையாம் என்பார், “நின் பேரை உன்னி வாழ்ந்திடும் படி செய்வையோ பேதுறச் செய்வாயோ நின் திருவுளம் அறியேன்” என முறையிடுகின்றார். திருவடியைச் சேராதார், வேண்டுதல் வேண்டாமைகளால் இடும்பை மிகுந்து அறிவு மயங்குவது பற்றிப் “பேதுறச் செய்வாயோ” என்கின்றார். உய்தி பெறற்குரிய தகுதி எய்துங்காறும் பிறப்புக் கேதுவாகிய மயக்கத்தில் ஆழ்ந்து அலமருவது உயிர்க்கு இயல்பு.

     இதனால், நின் திருவடியைத் துணையாகப் பற்றி வாழக் கருதும் என் எண்ணம் நிறை வேற அருள் புரிக என வேண்டியவாறாம்.

     (7)