780.

     வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும்
          வெற்பா ளொடும்தான் அமர்கின்ற
     மற்றிக் கோலம் கண்டு களிப்பான்
          வருந்தும் எமக்கொன் றருளானேல்
     கற்றைச் சடையான் கண்மூன் றுடையான்
          கரியோன் அயனும் காணாதான்
     பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப்
          பெருமான் பிச்சைப் பெருமானே.

உரை:

     கற்றையாய்த் திரண்ட சடையை யுடையவனும், கண்கள் மூன்றும் உடையவனும், கரிய திருமாலும் அயனும் காண மாட்டாதவனும், எருதேறி வருபவனும் ஆகிய திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் தியாகேசப்பெருமான் வெற்றியே பொருந்திய படையாய வேலேந்தும் பிள்ளையாகிய முருகவேளுடன் மலையான் மகளாகிய உமாதேவியும் தானுமாக வீற்றிருந்தருளும் இந்தக் காட்சியைக் கண்டு களித்தற்கு விரும்பும் எமக்கு ஒரு வாய்ப்பினை அருளானாயின், பிச்சைப் பெருமான் என்பது தேற்றமாம். எ.று.

     பலவாய்த் திரண்டிருத்தல் பற்றிக் “கற்றைச் சடையான்” என்றும், திருமாலின் மேனி கரிய நிறம் படைத்திருத்தலால் அவனைக் “கரியோன்” என்றும், இருவரும் ஒருகாலத்தே சிவனுடைய அடியும் முடியும் காண முயன்றும் மாட்டாராயினமையின், “கரியோன் அயனும் காணாதான்” என்றும், ஊர்தி எருதாதலின் “பெற்றத் திவர்வான்” என்றும் கூறுகின்றார். பெற்றம் - எருது. வெற்றியல்லது பிறிது காணாத பெருமை வாய்ந்ததாதலின், “வெற்றிப் படைவேல்” என்றும், பிள்ளைப் பருவத்தேயே வேற்போரில் ஒப்புயர்வில்லாத உரவோனாயினமையின், முருகனை, “படைவேற்பிள்ளை” என்றும் பாராட்டுகின்றார். மலையரையன் மகளாதலுடன் மலைக்குலமனைத்தையும் ஆளும் மாண்புடையளாதலின், உமையம்மையை “வெற்பாள்” என விளம்புகின்றார். தானும் உமையும் உடனிருக்க நடுவே குமரவேள் மடிமேலிருக்கத் தோன்றும் காதலன்புக் காட்சி காண்டற்கு மிக்க இன்பம் பயத்தலின், “அமர்கின்ற இக்கோலம் கண்டு களிப்பான்” என்று வுரைக்கின்றார். களிப்பான், பானீற்று வினையெச்சம். காண்டலருமை பற்றிக் “கண்டு களிப்பான் வருந்தும்” எனக் கூறுகின்றார்.

     (7)