781. வரமன் றலினார் குழலா ளொடும்வேல்
மகனா ரொடும்தான் அமர்கின்ற
திரமன் றவுநின் றெழில்கண் டிடுவான்
சிறக்க எமக்கொன் றருளானேல்
பரமன் தனிமால் விடைஒன் றுடையான்
பணியே பணியாப் பரிவுற்றான்
பிரமன் தலையான் ஒற்றித் தியாகப்
பெருமான் பிச்சைப் பெருமானே.
உரை: மேலானவனும் ஒப்பற்ற திருமாலின் உருவாகிய விடையவனும் பாம்பையே பூணாரமாகப் பரிவுடன் கொண்டவனும், பிரமனுடைய தலையொன்றைக் கபாலமாக வுடையவனும் ஆகிய திருவொற்றியூரிற் கோயில் கொண்ட தியாகப்பெருமான் உயர்ந்த மணம் கமழும் கூந்தலையுடைய உமையம்மையோடும் வேற்படை யேந்தும் முருகப் பெருமானாகிய மகனோடும் விரும்பி நிலையுறத் தெளிவாக நின்று இலகும் அழகு மிக்க காட்சியை நேர் நின்று கண்டு இன்புறற்குச் சிறப்பாக எமக்கு ஒரு நல்வாய்ப்பை அருளானாயின், பிச்சைப்பெருமான் என்பது தேற்றமாம். எ.று.
பரம் - மேல் என்னும் பொருளாதலின், பரமன் என்பதற்கு உலகங்களெல்லாவற்றிலுமுள்ள நற்பொருள் வகையனைத்துக்கும் மேலானவன் என்று பொருள் கொள்க. அவன் ஊர்ந்தருளும் விடை, அறக்கடவுளாய திருமாலின் திருவுருவம் என்பதுபற்றித் “தனிமால் விடை” என்கின்றார். அசுரரொடு சிவன் பொரச் சென்றபோது, ஊர்ந்த தேர் அச்சிற்றதாகத் திருமால் காளையுருக்கொண்டு தாங்கின வரலாற்றுக் குறிப்புப் புலப்படத் “தனிமால் விடையொன் றுடையான்” என உரைக்கின்றார். தனிமால் விடையாவது, ஒப்பற்ற பெரிய விடை என்பது பொதுவாகத் தெரிவிக்கும் பொருள். பணியென்பது, பாம்புக்கும் பூணாரத்துக்கும் வழங்கும் பல பொருள் ஒரு சொல். பிரமன் தலையோட்டைப் பலியேற்கும் உண்கலனாகக் கொண்டவன் என்பது விளங்க, “பிரமன் தலையான்” என்று இசைக்கின்றார். பிச்சைப் பெருமானை வடமொழியாளர் பிட்சாடனர் என்று இயம்புவர். வரம் - மேன்மை. மன்றல் - மணம் தரும் பொருள்; விரைப்பொருள் எனப்படுவது. மகளிர் கூந்தற்கு மணமூட்டும் இயற்கைப்பொருள் போலாது இயற்கையிலேயே மிகவுயர்ந்த ஞான மணம் கமழ்வது உமாதேவியின் கூந்தலாதலால், “வரமன்றலினார் குழலாள்” என்று சிறப்பிக்கின்றார். “மன்றலினார்” என்றவிடத்து ‘இன்’ சாரியை அல்வழிக்கண் வந்தது. வேல் மகனார் - சத்தி வேலேந்தும் முருகப் பெருமான். திரம் - நிலைபேறு. மன்ற என்னும் சொல் தெளிவுப் பொருண்மையுணர்த்தும் இடைச் சொல். “மன்ற வென் கிளவி தேற்றம் செய்யும்” (சொல். இடை. 17) என்று தொல்காப்பியம் சொல்லுவது காண்க. திரம் மன்றவும் நின்றெழில் என்ற தொடர், திரமுறத் தெளிவாக நின்று திகழும் எழில் என விரியும். ஒன்று ஒரு நல்வாய்ப்பு. (8)
|