782. அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம்
ஐய னொடுந்தான் அமர்கின்ற
திறங்கொள் கோலம் கண்டுக ளிப்பான்
சிறக்க எமக்கொன் றருளானேல்
மறங்கொள் எயில்மூன் றெரித்தான் கனக
மலையான் அடியார் மயல்தீர்ப்பான்
பிறங்கும் சடையான் ஒற்றித் தியாகப்
பெருமான் பிச்சைப் பெருமானே.
உரை: மறச்செயல்களைக் கொண்ட அசுரர்களுடைய மதில் மூன்றையும் எரித்துச் சாம்பராக்கியவனும், பொன்மலையையுடையவனும், அடியார்களின் அறிவை மயக்கும் மலமறைப்பைப் போக்குபவனும், உயர்ந்த சடையையுடையவனும் ஆகிய திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகேசப் பெருமான் அறச்செயலினளாகிய உமையம்மையோடும் கூர்வேலேந்திய எம்முடைய தலைவனாகிய முருகவேளுடன் உடனமர்ந்தருளுகின்ற தனது திறங்கொண்ட காட்சியைக் கண்டு மகிழ்ச்சி மிக்குச் சிறத்தற்கு எமக்கொரு வரம் அருளானாயின், பிச்சைப்பெருமான் என்பது தேற்றமாம். எ.று.
இறைவன் அருள் கொண்டு காஞ்சியம்பதியில் அறம் முப்பத்திரண்டும் வளர்த்தாள் என்ற குறிப்புத் தோன்ற “அறங்கொள் உமை” என்றும், இளையனாயினும் ஞானத்தாலும் சத்தியாலும் மக்கள் தேவர் முனிவர் அனைவர்க்கும் தலைவன் என்பதுபற்றி, “அயில்வேல் ஐயன்” என்றும் பாராட்டுகின்றார். அவர்கள் மூவரும் ஒருங்கிருக்கும் காட்சி ஞானமும் கிரியையும் இச்சையுமாகிய சத்தி மூன்றும் மூவகையுருவில் காட்சி தருவது போறல் பற்றி அதனைத் தமக்கு நல்குதல் வேண்டும் என்பாராய், “சிறக்க எமக்கொன்று” அருளுவானாதல் வேண்டும் என விளம்புகின்றார். உலகினர்க்குத் துன்பம் செய்தலே தொழிலாகவுடைய அசுரர் வாழும் எயில் சூழ்ந்த நகரத்தை, “மறங்கொள் எயில்” என்றும், அது பொன், வெள்ளி, இரும்பு என்று மூன்றாலுமாகியதெனப் புராணமுரைத்தலின், “எயில் மூன்”றென்றும், அதனைச் சிவபெருமான் கண்ணை விழித்து நோக்கியெரித்தான் என்பதால் “எரித்தான்” என்றும் கூறுகின்றார். கனகமலை - பொன்னிற முடியையுடைய மலை; இமயத்தின் ஒரு கூறாகிய இதனை, தமிழர் பொன்மலை யென்றும், வடவர் காஞ்சன சிருங்கமென்றும் மொழிவர். அடியார்களின் உயிரறிவை அனாதியே ஒளிக்குள் இருள்போலப் பற்றியிருக்கும் மலம் மறைக்கும் மறைப்பை மயல் எனவும், அதனை ஞானவொளி தந்து நீக்குவது புலப்பட, “அடியார் மயல் தீர்ப்பான்” எனவும், மின்னலின் நிறம் திகழ்வது பற்றிச் சடையைப் “பிறங்கும் சடையான்” என்றும் இசைக்கின்றார். (9)
|