783.

     தேசார் அயில்வேல் மகனா ரொடும்தன்
          தேவி யொடும்தான் அமர்கோலம்
     ஈசா எனநின் றேத்திக் காண
          எண்ணும் எமக்கொன் றருளானேல்
     காசார் அரவக் கச்சேர் இடையான்
          கண்ணார் நுதலான் கனிவுற்றுப்
     பேசார்க் கருளான் ஒற்றித் தியாகப்
          பெருமான் பிச்சைப் பெருமானே.

உரை:

     படமுடைய பாம்பைக் கச்சாக வணிந்த இடையையுடையவனும், கண் பொருந்திய நெற்றியை யுடையவனும், அன்பால் மனம் கனிந்து பேசாதவர்க்கு அருள் செய்யாதவனும் ஆகிய திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகப்பெருமான், ஒளி நிறைந்த கூரிய வேற்படையையுடைய மகனாகிய முருகவேளொடும் உமாதேவியொடும் தான் வீற்றிருந்தருளும் அழகிய காட்சியைக் கண்டு, ஈசனே என்று பரவி வாழ்த்த விழையும் எமக்கு அக்காட்சி யொன்றை அருளானாயின், பிச்சைப் பெருமான் என்பது தேற்றமாம். எ.று.

     தேசு - ஒளி. அயில் - கூர்மை மிக்க வேல்; ஒளி திகழும் இயல்பிற்றாதலின், “தேசார் அயில் வேல்” என்று செப்புகின்றார். அமர்கோலம் - வீற்றிருக்கும் காட்சி. கண்டு என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. காசு, பணத்துக்காகிப் பின் பாம்பின் படத்துக்காயிற்று. இடையது தோலாடையாதலின் அதனை இறுகப் பிணித்தற்குப் பாம்பு கச்சாயிற்று. கனிவு - அன்பால் உண்டாகும் மனக் குழைவு.

     (10)