20. திருவடிச் சரண் புகல்
திருவொற்றியூர்
நெஞ்சினை
வேறு வைத்து நோக்கும் வள்ளற்பெருமான், ஒன்றிலும் ஊன்றி நிற்பதின்றி எங்கும் ஓடுவதும்,
யாரும் இல்லாத அனாதைபோல் ஏங்குவதும் அதன் செயலாக இருப்பதை மனக் கண்ணிற் காண்கின்றார்.
வேண்டும் பொருள் இல்லையாயின் அதற்காக வருந்தி ஏங்குவதும் அதனிடத்தே காணப்படுகிறது. கீழ்
மக்களின் ஈன வாழ்வு கருத்தை ஈர்க்கின்றது; இரக்கமுற்று அவர் கூட்டத்தை நாடினால் காலத்தை
வீணாக்குவதுதான் அவரது பெருஞ் செயலாகவுள்ளது. வாழ்விடையுளவாகும் மாற்றங்களால் புதியதை
விரும்பி முன்னையதைக் கைவிட்டு வருந்தும் நிலை மக்களினத்தே காணப்படுகிறது. கயவர் இணக்கம்
பெற்று அவரது இல்லத்திற்றொடர்பு கோடலும் காமம் விளைவிக்கும் புலனுகர்ச்சியும்,
வஞ்சவுணர்வும் தோன்றி வருத்தமுறுவித்தலும் வள்ளற்பெருமான் மனக்கண் மக்கட் சூழலில் நிலவக்
காண்கிறது. நங்கையர் மயல் விளைவித்தலும், மயங்கிய ஆடவர் அவர்களுடைய காலடியில் வீழ்தலும்
இயல்பாக நிகழ்கின்றன. பிறவிப் பிணியும் இவற்றிடையே காட்சி தருகிறது. இந்த அவல நிலைக்கு
உய்வழியாவது சிவபெருமானுடைய அருணெறியென்பது நன்கு தெரிகிறது. “துன்பத்திற்கு யாரே துணையாவார்
தாமுடைய நெஞ்சம் துணையல் வழி” என்ற குறட்பாவை நினைந்து நெஞ்சினை
முன்னிலைப்படுத்துகின்றார்; மேற்கூறிய காட்சிகளின் இடையே நெஞ்சம் அலைந்து துன்புறுவது கண்டு,
அதனை நிறுத்தி, நெஞ்சமே, இதற்கு உய்தி தரும் பொருளாவது இறைவன் திருவடி; அதனைப் புகலாக
அடைகுவையேல் துன்பச் சூழலின் நீங்குவோம் என்று இப்பத்திற் பாட்டுத் தோறும்
வற்புறுத்துகின்றார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 784. ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே
மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க்
கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
கோயில் மேவிநம் குடிமுழு தாளத்
தாள்த லந்தரும் நமதருள் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
உரை: நெஞ்சமே, இனி நீ எங்கும் ஓடுதலொழிக; நமக்குக் குறை யாது? நமக்கென உற்ற நல்ல துணையாவார் ஒருவரும் இல்லாதார் போல வாடுவது சிறிதும் வேண்டா; என்னுடன் வருக; நாம் இருவரும் மகிழ்வுடன் சென்று கூடல் நகர்போன்ற திருவொற்றியூர்க்கண் உள்ள கோயிலுள் எழுந்தருளி நமது குடி முற்றும் இனிது ஆளுவாராய்த் திருவடியின் நீழல் நலத்தை நல்கும் நமது அருட் செல்வமுடைய தந்தையாகிய சிவனது திருவடியைப் புகலாக அடைவோமாக. எ.று.
பொறி புலன் வழியாகக் காணப்படும் உலகு முற்றும் பரந்து செல்லும் இயல்பிற்றாகலின் “நெஞ்சமே ஓடல் எங்கணும்” என்றும், குறையுடையவரே அதனை நிறைத்தற்பொருட்டு உலகில் எங்கணும் சென்று திரிவர்; நமக்கு ஒரு குறையுமில்லை என்பாராய், “நமக்கு என்ன குறை காண்” என்றும், இடருற்ற விடத்துச் சோர்வின்றிப் போந்து அறிவும் பொருளும் பிறவும் தந்து துணை செய்வோர் இல்லாதவரே அவ்வின்மை பற்றி ஏங்கி வாட்டமுறுவர்; நீ வாட்டமுறுதல் வேண்டா என்று உரைப்பாராய், “உற்ற நற்றுணை ஒன்றும் இல்லார் போல் வாடல்” என்றும் மொழிகின்றார். மேலும் பேசுவாராய், எங்கும் ஓடி இடர்ப்பட்டு வருந்துவதை விடுத்து மகிழ்வுடன் நாம் இருவரும் சேர்ந்து சிவனிடம் செல்வோம் என்பார், “வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று” என்றும், எங்குச் செல்வதென்னும் வினாவுக்கு விடை வழங்குவது போலக் “கூடல் நேர் திருவொற்றியூரகத்துக் கோயில் மேவி” என்றும் கூறுகின்றார். கூடல் எனப் பொதுவாக மொழிதலால் மதுரை நகரே கொள்ளப்படும். திருவொற்றியூர்க்கண் உள்ள திருக்கோயிற்குச் சென்று செய்வது இது வென்பார், அங்கே எழுந்தருளும் “நமது அருட் செல்வத் தந்தையார் அடிச்சரண் புகலாம்” என அறிவுறுத்துகின்றார். சிவபெருமான் அவ்வூர்க்கண் கோயில் கொண்டது நம் பொருட்டென்றற்கு, “நம் குடி முழுதாள” என்றும், திருவடித்தலமே திருவருள் நிலையம் என விளங்கத் “தாள் தலம் தரும்” என்றும் இயம்புகின்றார்.
இதன்கண், நெஞ்சினை நேர்வித்து ஒற்றியூர்க் கோயில் மேவி அருட் செல்வனாகிய சிவபெருமானது திருவடிச் சரண்புகலாம் என வற்புறுத்தியவாறு. (1)
|