785.

     ஏங்கி நோகின்ற தெற்றினுக் கோநீ
          எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு
     வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல்
          மகிழ்ந்து நெஞ்சமே வருதிஎன் னுடனே
     ஓங்கி வாழ்ஒற்றி யூர்இடை அரவும்
          ஒளிகொள் திங்களும் கங்கையும் சடைமேல்
     தாங்கி வாழும்நம் தாணுவாம் செல்வத்
          தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

உரை:

     நெஞ்சமே, வேண்டியதொன்று பற்றி நீ ஏங்கி நிற்பது எதற்காக? நீ பலபட எண்ணி வேண்டுவது யாதாயினும் பலவாயினும் யாவையும் உனக்குச் சிவன்பால் வாங்கித் தருவேன்; ஒன்றுக்கும் நீ அஞ்சவேண்டா; என்னோடு மகிழ்வுடன் வருக; புகழ் ஓங்கி வாழும் திருவொற்றியூரில் பாம்பும், ஒளி திகழும் திங்களும், கங்கையும் சடைமேற் கொண்டு உறையும் நம் தாணுவாகிய செல்வத் தந்தையாருடைய திருவடியைப் புகலாய் அடைவோம். எ.று.

     வாழும் நாட்களில் வேண்டுவன பலவற்றுள் அரியன சிலவாகும்; அவற்றின் பெறலருமை குறித்து மனத்தில் ஏங்குவோர் பலராவர். தமது முயற்சியால் எவையும் பெறலாகாமையும் இறைவன் அருளால் எவையும் பெறல் எளிமையும் அறிந்தோர் மிகவும் சிலராவர். வேண்டும் அரிய பொருள் கருதி நெஞ்சம் ஏங்குவது காண்டலின் வள்ளலார், “ஏங்கி நிற்பது எற்றினுக்கோ” என்று வினவி, இறைவனருள் பெற்று எல்லாம் பெறலாம் என்ற கருத்துத் தோன்ற, “எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு வாங்கி யீகுவன்” என்றும், ஆகாதென்று அஞ்சுதல் வேண்டா “எனற்கு, ஒன்றுக்கும் அஞ்சல்” என்றும் இயம்புகின்றார். ஐயுற்று மாறுவது நெஞ்சிற்கியல்பாதலின், “மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே” என உரைக்கின்றார். ஒற்றியூர்க்கண் உறையும் தாணுவாகிய சிவபெருமான் அருளாளன் என்பது விளங்கச் சடையிற் பிறையும் கங்கையும் தாங்கும் அருட்செயலை விதந்தோதி, அப் பெருமானுடைய திருவடிகளல்லது புகல் வேறின்மையின், “தாணுவாம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே” என்று, பரவுகின்றார்.

     இதன்கண், அரியவற்றைச் சிவனருளால் பெறலாம். ஏங்குதல் வேண்டா என்பதாம்.

     (2)