786.

     கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே
          காம ஐம்புலக் கள்வரை வீட்டி
     வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை
          மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே
     உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்
          குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்
     தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்
          தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

உரை:

     கீழ் மக்கள் மனைகட்குச் சென்று அவரொடு கூடிக் கீழ்மைச் செயலால், மனமே, நீ கலங்குதலை ஒழிக; காமநோயை நல்கும் ஐம்புலன்களாகிய கள்வரை வீழ்த்தி உனக்கு வெற்றி எய்துவிக்கின்றேன். காண்; யான் கூறுவதை மறுத்தல் செய்யாதே; இன்று நீ என்னுடனே வருக; உய்தி நல்கும் நலம் பொருந்திய திருவொற்றியூரில் அமர்ந்து கோயிலையடைந்து தியாகப்பெருமானை முன்னின்று வாழ்த்திச் சிந்திப்பவர்க்குத் திருவருளை அளிக்கும் தனிமுதற் செல்வத் தந்தையின் திருவடி நீழலைப் புகலடைவோமாக. எ.று.

     கயவர் - கீழ்மக்கள். கயமர் - உயர்ந்தவர்; கயமனார் என்ற பெயருடன் சங்கச் சான்றோர் வாழ்ந்திருக்கின்றனர். கீழ் மக்கள் கீழ்மைச் செயலையே செய்யக் காட்டி யூக்குவர்; அவர் வயப்பட்ட நன்மனவர், கீழ்மையை உணர்ந்து மனம் கலங்கி வருந்துபவாதலின், அவ்வுண்மை விளங்க, “கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே” என்று கூறுகின்றார். கலங்கலை, கலங்கா தொழிக என்னும் எதிர்மறை முற்று வினை. கலங்கலை என்பதில் அல் எதிர்மறைக் குறிப்பையும் ஐ விகுதி முன்னிலை வினைமுற்றையும் உணர்த்து வனவாம்; அஞ்சற்க என்பது அஞ்சலை என வருதல்போல எனக் கொள்க. ஐம்புலன்களும் காம நுகர்ச்சிக் குரியவாதலின், “காம வைம்புலன்” என்றும், அறிவற்றம் நோக்கி மனத்தைக் கவர்ந்து காமக் கூட்டத்திற் புணர்த்தல் பற்றிக் “காம வைம்புலக் கள்வர்” என்றும் வள்ளற் பெருமான் குறிக்கின்றார். “கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள” என்று (குறள்) திருவள்ளுவர் தெரிவிப்பதறிக. வயம் - வெற்றி; வய என்னும் வலியேதுவாக எய்தும் வெற்றி வயம் எனப்பட்டது. அளிக்குவன், தன்மை வினைமுற்று. காண்டி, முன்னிலை யேவல் முற்று மறுத்துப் பிணங்குவது இயல்பாதலால், “என் மொழியை மறுத்திடேல்” என்று உரைக்கின்றார். உய்வு - உய்தி. உற்று - நின்று வாழ்த்தியென மாறுக. தயவு - அருள்; தயையென்னும் வடசொற்றிரிபு. ஒப்பற்ற திருவருட் செல்வன் என்பார், சிவனை, “தனிமுதற் செல்வத் தந்தை” என்று இயம்புகின்றார்.

     இதன்கண், கயவர் கூட்டுறவையும் காமக்களிப்பையும் விட்டுத் தியாகப்பெருமானைச் சிந்தித்து அருள் பெறுக என்று தெரிவித்தவாறாம்.

     (3)