787. சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை
தாயி லார்எனத் தயங்குகின் றாயே
மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா
வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்
உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்
தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
உரை: வன்மை கொண்ட கொடிய பிறவிப் பிணியால் தந்தை தாயரையில்லாதாரைப் போலத் தயங்குகின்ற நெஞ்சமே, மண்ணுலகத்தில் வருந்துகின்றாய்; சுகமாக வாழவேண்டுமாயின், என்னுடன் வருக; ஒள்ளிய தலமாகிய திருவொற்றியூரகத்தும், தன்னை நினைக்கின்றவர் உள்ளமென்னும் ஒப்பற்ற தண்ணிய தலத்தினும் சார்ந்துறையும் நம்முடைய செல்வத் தந்தையாகிய சிவனுடைய திருவடி நீழலைப் புகலாக அடைவோமாக. எ.று.
நிலவுலகிற் பிறக்கும்போதே பெற்றோரை யிழந்த அனாதையைச் “சண்ட வெம் பவப்பிணியினால் தந்தை தாயிலார்” எனக் கூறுகின்றார். சண்டம் - வலிமை. பவம் - பிறப்பு. ஆதரிப்பார் இன்மையின், அவர்கள் நடை தவறித் துன்புறுதல்போல மனம் வருந்துவது கண்டு, “தந்தை தாயிலார் எனத் தயங்குகின்றாயே” என்றும், தலை மயங்கிச் சுழன்று வருந்துமாறு தோன்ற “மண்டலத்துழல் நெஞ்சமே” என்றும் கூறுகின்றார். மண்டலம் - மண்ணுலகம். மனம் நெறிப்பட்டாலன்றிச் சுக வாழ்வு இல்லையாதலின், “சுகமா வாழ வேண்டில் என்னுடனே வருதி” என்று உரைக்கின்றார். சுகப்பேற்றுக்கு இடம் கூறுதலுற்றவர், சிவன் திருவொற்றியூரிலிருப்பதை, “ஒண்தலத் திருவொற்றியூரிடத்தும்” என்றும், நினைப்பவர் நெஞ்சும் சிவன் எழுந்தருளும் இடமாம் என்றற்கு “உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் தண்டலத்தும்” என்றும் இயம்பி, அங்கே அப் பெருமான் திருவடியிற் சரண் புகலாம் என்பாராய், “நம் செல்வத் தந்தையாரடிச் சரண்புகலாமே” என்றும் மொழிகின்றார். ஒண்டலம் - ஒள்ளிய இடம். உன்னுதல் - சிந்தித்தல்.
இதன்கண், சிவன் திருவடியைப் புகலடைய வேண்டின் அவனைத் திருவொற்றியூரிடத்தும் அவனைச் சிந்திப்போர் சிந்தைக்கண்ணும் கண்டு புகலடைதல் வேண்டும் என்பதாம். (4)
|