788. விடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ
வெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ
மடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல
வாழ்வு வந்தது வருதிஎன் னுடனே
இடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா
ரியார்கண் டாய் ஒன்றும் எண்ணலை கமலத்
தடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
உரை: நச்சுத்தன்மை கொண்ட கண்களை யுடைய மகளிர் அடி விழுந்து, ஐயகோ, என் மட நெஞ்சமே, வெட்கமுற்றாய்; இந்த இழிவு நினக்கு எய்துவானேன்? இப்போது உனக்கு நல்வாழ்வு வந்துள்ளது; என்னுடன் வருக. இடமகன்ற மண்ணுலகில் இப்பொழுது நமக்கு ஒப்பாவார் யார் உளர்? ஒன்றும் நீ நினைக்க வேண்டா; தாமரைப்பொய்கைகள் கொண்ட திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் அருட்செல்வத் தந்தையாகிய சிவனது திருவடியைச் சரண் புகலாம். எ.று.
கண் பார்வையால் காணப்பட்டார் உள்ளத்திற் காமநோயை விளைவிக்கும் மகளிரை “விடங்கொள் கண்ணினார்” என்றும், காம மயக்கத்தால் அறிவு திரிந்து அவரது மெய்யுறு புணர்ச்சி விரும்பி அவர்களுடைய காலில் வீழ்ந்து, மயக்கம் தீர்ந்தபின் தம்முடைய செய்கை நினைந்து நாணுவது குறித்து, “அடிவிழுந்து ஐயோ வெட்கினாய்” என்றும், சிவஞான சிவபோகம் வேண்டிச் சிவபரம்பொருளை அடிபணிந்து சான்றோர் புகழும் சால்புபெற வேண்டிய நீ, அதனைச் செய்யாமல் காமக்களிப்புற்றது தலைவிதியன்று; நீயே நினைந்து செய்யும் தீமை என்றற்கு “விதியுனக்கு ஏனோ மடம்கொள் நெஞ்சமே” என்றும் இயம்புகின்றார். அறியாமை யிருளிற் படிவது பற்றி, “மடங்கொள் நெஞ்சமே” என வைகின்றார். நல்லுணர்வும் நற்செய்கையும் மேற்கோடல் கண்டுரைத்தலால், “நினக்கின்று நல்ல வாழ்வு வந்தது” என்றும், இறைவன் திருவடிச் சரண் புக வருகென அழைக்கலுறுதலின், “வருதியென்னுடனே” என்றும் இசைக்கின்றார். சிவனதருள் பெற முற்பட்ட முனைப்பால் பேசுதலால், “இடங்கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய்” என்றும், இதனின் வேறு யாதும் எண்ணாமல் ஒற்றியூர்ப் பரமன் தாளினைச் சரண் புகுதலை எண்ணுக என வற்புறுத்துவாராய், “ஒன்றும் எண்ணலை கமலத் தடங் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வத் தந்தையார் அடிச்சரண் புகலாமே” என்றும் இசைக்கின்றார்.
இதன்கண், மையல் தரும் மகளிர் அடி வீழ்ந்து தெளிந்து வெட்குதலினும், ஒற்றியூர் அமர்ந்த செல்வத் தந்தையார் அடிச் சரண் புகுக என வற்புறுத்தவாறு. (5)
|