789. பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
போக்கி நின்றனை போனது போக
வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
திருந்தி நின்றநம் மூவர்தம் பதிகச்
செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
உரை: இவ்வுலக வின்பத்தினும் மிக்கது பிறிதில்லை யென்பாரொடு கூடி அவர் கூட்டத்திற்கு புகுந்து வீண்காலம் போக்கினாய்; நெஞ்சமே, போனது போகட்டும்; இனியும் வருந்தி இங்கே கிடந்து உழலுதல் வேண்டா; என்னுடன் வருக; வாழ்க வாழ்க; திருந்திய நெறியினின்ற நம்முடைய ஞானசம்பந்தர் முதலிய மூவர்களின் பதிகமாகிய செவ்விய இனிய தமிழாகிய தேனையுண்டு திருவருளைத் தரும் அழகிய திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் நம் செல்வத் தந்தையாகிய தியாகப் பெருமானுடைய திருவடிச் சரண் புகுவோம். எ.று.
ஈனர் - இவ்வுலகத்தினர். “ஈனோர்க் குரைப்பாம் பதிகத்துள் இயன்றவாறே” (சீவக. 29) என வழங்குதல் காண்க; இங்கே இவ்வுலகியலின்பமே பெரிதெனக் கருதி அது பெறுதற்கே முயல்வர். ஈனரைக் குறைந்தவர் என்ற பொருளில் வரும் வடசொற் சிதைவாகக் கொண்டு அறிவு ஒழுக்கங்களில் குறைபாடுடையாரை ஈனர் என்றலுமுண்டு. போகிய காலத்தை மீளப்பெறுதல் கூடாமையின் “வீண்காலம் போக்கி நின்றனை போனது போக” என்றும், காலம் வீண் போதல் கண்டு உணராது வீணெறிக் கண்ணே நின்றமை பற்றி, “நின்றனை” என்றும் இயம்புகின்றார். இனி அது குறித்து வருந்துவ தொழிந்து ஊக்கம் கொண்டு தன்னொடு வருகென நெஞ்சைத் தூண்டுகின்றமையின் “வருந்தியின்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ என்னுடன் வருதி” என்று அறிவுறுத்துகின்றார். உழலுதல் - வருத்தமுறல். “எற்றென் றிரங்குவ” செய்து வருந்தும் நிலையைப் போக்கித் தெளிவுற்றுத் தான் உரைப்பதைக் கேட்கச் செய்தலின், “திருந்தி நின்று” என்றும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் ஆகிய மூவர் பாடியுள்ள தேவாரத் திருமுறைகளை ஓதுக என்பார். “நம் மூவர் தம் பதிகச் செய்ய தீந்தமிழ்த் தேறலுண்டு” என்றும், அது மாத்திரம் போதாது, திருவொற்றியூர்த் திருக்கோயிலினுள் வீற்றிருந்தருளும் தியாகப் பெருமான் அருள் பெறற்கு அவர் திருவடியே சரண் எனப் புகுக என அறிவுறுத்துவாராய், “அதனைத் தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வத் தந்தையார் அடிச்சரண் புகலாமே” என்றும் உரைக்கின்றார். இடைக்காலத்தில் தமிழ் வேந்தராட்சி வீழ்ந்ததும், கோயிலுட் புகுந்த வேதியர் எல்லாவற்றையும் வடமொழிப்படுத்த மேற்கொண்ட முயற்சி வடலூர் வள்ளற்பெருமான் காலத்தே முற்றுப் பெற்றுவிட்டமையின், தமிழ் வேந்தர் காலத்துத் திருப்பதியம் என்ற சொல்லாட்சி திருப்பதிகமென மாறியதால் “நம் மூவர்தம் பதிய” மென்னாது “பதிகம்” எனக் குறிப்பாராயினர். பதியங்கள் அனைத்தும் தூய தமிழிலாகியவை யாதலால் “பதிகச் செய்ய தீந்தமிழ்” என்றும், அவற்றின் ஒவ்வொரு சொல்லும் தித்திக்கும் இயல்பினவாய் இருத்தல் பற்றித் “தீந்தமிழ்த் தேறலுண்டு” என்றும் இயம்புகின்றார். திருவொற்றியூர்க் கோயில் வழிபாடு திருவருளைப் பெருக வழங்கும் சிறப்புடையதென்பார், “அருளைத் தரும் தென் ஒற்றியூர்” என்று சிறப்பிக்கின்றார்.
இதன்கண், இவ்வுலகியல் இன்பமே பெரிதெனக் கருதி முயல்வோர் கூட்டமே நயவாது நம் மூவர் பதிகத் தமிழ்த் தேறலுண்டு ஒற்றியூர்ப் பரமன் அருள் பெறுக என உரைக்கின்றார். (6)
|