79. உளங்கொள் வஞ்சக நெஞ்சர் தம்மிடமிட
ருழந்தகம் உலை வுற்றேன்
வளங்கொள் நின்பத மலர்களை நாடொறும்
வாழ்த்திலே னென்செய்கேன்
குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும்
குறிக்கரும் பெருவாழ்வே
தளங்கொள் பொய்கைசூழ் தணிகையம் பதியில்வாழ்
தனிப்பெரும் புகழ்த் தேவே.
உரை: இடம் அமைந்த பொய்கைகள் சூழ்ந்த தணிகைப் பதியில் எழுந்தருளும் தனித்த பெரிய புகழை யுடைய தேவ தேவனே, நெற்றியிற் கண்ணையுடைய சிவனும் கரிய நிறமுடைய திருமாலும் பிரமதேவனும் குறிக்கொண்டு பரவுதற்கரிய பெருவாழ் வாயவனே, உள்ளத்தில் வஞ்ச நினைவுகளை யுடையவர்களிடம் சென்று துன்பமுற்று மனம் உளைந்து வருந்தினேனே யன்றி அருள்வளம் மிகுந்த நின் திருவடித் தாமரைகளை நாளும் வாழ்த்தி வணங்கினேனில்லை; இனி யான் என்ன செய்வேன்? எ. று.
தளம்-இடம். பொய்கை-நீர் நிலை. தனிப்பெரும் புகழ்-நிகரற்ற பெருமை வாய்ந்த புகழ். குளம் - நெற்றி. நெற்றியிற் கண்ணுடைப் பெருமானாதலால், சிவனைக் “குளங்கொள் கண்ணன்” என்று கூறுகிறார். திருமாலுக்காம் போது கண்ணன் என்னும் சொல் கரிய நிறமுடையவன் என்று பொருள்படும். வாழ்வு தருபவனை வாழ்வே என்பது உபசாரம். நெஞ்சின் உள்ளிடம் உளம்; இதனைப் புந்தி வட்டம் என்றலும் உண்டு. வஞ்ச நினைவுகள் நெஞ்சில் ஆழ்ந்து கிடப்பனவாதலால் வஞ்சகரை, “உளங்கொள் வஞ்சக நெஞ்சர்” என்று குறிக்கின்றார். சொல்வேறு செயல்வேறு படுவோர் வஞ்சகர். அவர் சொற்களால் மயங்கிச் செயல் வகைகளால் துன்புற்று வருந்திய திறத்தை “வஞ்சக நெஞ்சர் தம்மிடம் இடருழந்து அகம் உலை வுற்றேன்” என்று இயம்புகின்றார். இடருற்ற விடத்து மனம் நிலை குலைந்தமையை “அகம் உலைவுற்றேன்” என வுரைக்கின்றார். திருவருளாகிய வளம் மிக்கதறியாது திரிந்தமை புலப்பட “வளங்கொள் பதமலர்” என மொழிகின்றார். மலரின் தேன் போலத் திருவடிக்கண் அருள்வளம் மிக்குளது என்பது குறிப்பு. தொழத்தக்க பெருமான் என்பதறிந்து நாளும் தொழா தொழிந்தமைக்கு இரங்குதலால் “நாடொறும் வாழ்த்திலேன்” என வருந்துகிறார். “பரமேட்டி பாதம் காலையும் மாலையும் போய்ப் பணிதல் கருமமே” (ஆரூர்) என ஞானசம்பந்தர் வற்புறுத்துவது காண்க. கையறவு மிக்குற்றமையால் “என் செய்கேன்” என வருந்துகின்றார்.
இதனால், வஞ்சர்பாற் சென்று இடருழந்து வருந்தினமையும் அதனால் வழிபாடு கைவிட்டமையும் கூறி உய்யும் நெறி யருளுக என வேண்டியவாறாம். (8)
|