790.

     நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா
          நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
     வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ
          வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
     கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்
          கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்
     தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்
          தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

உரை:

     இன்ப நாட்டமுற்று எழுமையும் பிரியாது என்னோடு இருந்துவரும் நல்ல நெஞ்சமே, மகளிர் மயக்கத்தால் வாடிச் செயல் வகையறியாது மயங்கினாய்; ஐயோ, நீ நல்வாழ்வு வாழவேண்டின் என்னுடன் வருக; முறை கோடுவதின்றி மலர்போன்ற இரு கைகளையும் உச்சியிற் கூப்பிக் கும்பிடும் பெருங்குணமுடைய நன்மக்கட்குத் திருவடித் தலத்தைத் தந்தருளும் திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் அருட்செல்வத் தந்தையாகிய சிவபெருமான் திருவடி நீழலைப் புகலாகப் பெறலாம். எ.று.

     எல்லா வுயிர்க்கும் இன்பப் பேறு நாட்டமே யன்றி வேறில்லையாதலின், உயரின் அகக்கருவியாகிய நெஞ்சம் அதனையே நாடுவது பற்றி, “நாட்டமுற்று” என்றும், பிறப்புத்தோறும் உயிரோடே தொடர்ந்து வருதலால் “எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே” என்றும் இசைக்கின்றார். எழுமையும் பிரியாமைப்பற்றி “நல்ல நெஞ்சமே” என்பது பொருத்தமாகும். மகளிரால் தூண்டப்படுவது காம மயக்காதலின், “நங்கையர் மயலால்” என்றும், அம் மயக்கம் உலகில் உடம்பு தோற்றுவிக்கும் குறிப்புடையதாகலின் அதன் தோற்றமும் பெருக்கமும் மாய்வும் யாவும் உடலை வாட்டும் செயலினவாதலால் “வாட்டமுற்று” என்றும், மயக்கமும் இப்போது எய்துகின்றனை, இது நம் வாழ்வுக்கு நலம் பயவாது என்பாராய், “ஐயோ வாழ வேண்டிடில் என்னுடனே வருதி” என்றும் உரைக்கின்றார். கோட்டம் - முறை கோடுதல்; கோணுதலுமாம். வழிபாட்டுக்குரிய நெறியும் முறையும் கோடுதல் கூடாதென்றற்குக் “கோட்டம் அற்று” எனவும், கும்பிடும் கை, மலர்போல் குவிதலும் விரிதலும் செய்தலின், “மலர்க்கரம் கூப்பிக் கும்பிடும்” என்றும், கோட்டமின்றிக் கூம்பலும் விரிதலும் கும்பிடுதற்கமைந்த பெருங் குணமாதலால், “கும்பிடும் பெருங் குணத்தவர்” என்றும், அத்தகைய நல்லோர்க்கு இறைவன் திருவடித் தலம் தந்து திருவருளின்பம் பெறுவிக்குமாறு புலப்படத் “தாள் தலம் தரும் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண் புகலாமே” என்றும் கூறுகின்றார்.

     இதன்கண், மனத்தே கோட்டமின்றிக் கும்பிடும் பெருங் குணத்தவர்க்கு ஒற்றியூர் முதல்வன் தாட்டலம் தந்து அருள் செய்வன் என்பதாம்.

     (7)