791. உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
வாழ வேண்டிடில் வருதிஎ னுடனே
அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
உரை: உடுத்தற்கு உடை வேண்டுவோர் முன்னே யுடுத்திருந்த ஆடையை யிழந்தது போல, இன்பம் பெறுவான் வேண்டி, உள்ளது இன்பத்துக் கேதுவாமென நினையாது முன்னை வாழ்வுக் கேதுவாயிருந்ததை இழந்தாய்; இனி, வாழவேண்டின் என்னுடன் வருக; திருவருளை அடைதல் வேண்டி நெடிது நின்று பன்முறை அழுது வழிப்பட்டு அரிய தவம் செய்வோர் பெற முயலும் அழிவில்லாத தெய்வப் பிறப்புத் தமக்கே எய்துமாறு காத்துக்கொள்ளவேண்டி நல் ஒற்றியூர்க்கண் எழுந்தருளும் அருட் செல்வத் தந்தையாகிய தியாகப்பெருமான் திருவடிப் புகலடைவோமாக. எ.று.
நாளை எய்தக் கருதும் இன்பத்தின் பொருட்டு இன்று இன்பத்துக்கு ஏதுவாய் உள்ளதை இழப்பது அறிவிலாமை என்றற்கு “உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே” எனக் கூறுகின்றார். இதனை விளக்குதற்கு “உடுக்கை வேண்டி முன் உடை இழந்தார்போல்“ என உவமம் மொழிகின்றார். உள்ள - உள்ளவை. ஆகும் - இன்பத்துக்கு ஏதுவாகும். வேண்டும் பொருள் கைக்கண் எய்தினாலன்றி உள்ளதை இழத்தல் ஒருகாலும் அறிவுக்கு ஒவ்வாத செயலாம் என உணர்க. “உள்ளது சிதைப்போர் உளரெனப் படார்” (குறுந் : 283) எனச் சங்கச் சான்றோரும் கூறுவர். இறைவன் திருவருள் இன்பம் பெற்று வாழ்வதே வாழ்வு; அதனை விடுத்தால் உலகியற் பொருள்கள் நல்கும் வாழ்வு சின்னாளிற் சீர்குலைந்து போம் என்று கருத்திற் கொண்டே, “வாழ வேண்டில்” என்றும், அருள் வாழ்வே தக்கதென்றுணர்வாயாயின் என்னுடன் வருக என்பாராய், “வருதி என்னுடனே” என்றும் கூறுகின்றார். திருவருள் வாழ்வைப் பெற முயலுவோர் அரிய தவமுடையோராவர்; அவ்வாழ்வு பெறற்பொருட்டு அதற்குரிய நெறிக்கண் நின்று அழுது ஏத்துகின்றார்கள் என்ற கருத்துப் புலப்பட, “அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி” என்று உரைக்கின்றார். அருட் பேற்றுக்கு அழுதலும் ஒரு நெறியாம் என்பது விளங்க, “ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” (சதக. 94) என மணிவாசகர் கூறுவதறிக. அருள் வாழ்வு பெறும் தவச் செல்வர் எய்துவது பிறவாப் பெருவாழ்வாதலால் அதனை “அழிவுறாப் பவம்” என்றும், மேற்கொண்ட அருட்டவம் கெடாவாறு தடுப்பது கடமையாதலாலும் அதற்கு இறைவன் திருவடியைப் புகலடைவதன்றி வேறு வழியில்லை யென்றற்குத் “தடுக்க வேண்டி நல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண் புகலாமே” என்றும் எடுத்துரைக்கின்றார்.
இதன்கண், இன்ப வாழ்வு வேண்டின் இறைவன் அருள் நோக்கி அழுதழுதரற்றுதல் வேண்டு மென்றும், திருவடியைப் புகலடைய வேண்டுமென்றும் உரைத்தவாறாம். (8)
|