792. மோக மாதியால் வெல்லும்ஐம் புலனாம்
மூட வேடரை முதலற எறிந்து
வாகை ஈகுவன் வருதியென் னுடனே
வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
போற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
உரை: மோக முதலிய குற்றங்களைப் படைத்துணையாக் கொண்டு ஆன்ம வறிவை வெல்லும் ஐம்புலன்களாகிய மூட வேடரை வேரோடும் அறக்கெடுத்து உனக்கு வெற்றி மாலை சூடுவேன். என்னுடைய நெஞ்சே, என்னுடன் வருக; வஞ்சம் நிறைந்த வாழ்க்கைச் சூழலிற் கிடந்து நீ மயங்குகின்றாய்; உலகியற் போகங்களைத் துறந்து புண்ணியங்களைச் செய்து நாடோறும் போற்றிப் புகல்வார்க்கு வீண் சாவு நீத்து நல்லருள் புரியும் ஒற்றியூர் அருட் செல்வத் தந்தையாகிய சிவபெருமானது திருவடி நீழலைச் சரண் புகலாம். எ.று.
மோகம், குரோதம், லோபம், காமம், மதம், மாற்சரியம் என்னும் அறுவகைக் குற்றங்களை ஐம்புல வேடர்க்குப் படைத் துணையாகக் குறிப்புருவகம் செய்கின்றார். புலனைந்தும் மோக முதலிய கருவிகளில் மோக வலையைப் பரப்பி ஆன்மவுணர்வை யகப்படுத்தி அலைத்தலால், “மோக மாதியால் வெல்லும் ஐம்புலனாம் மூடவேடர்” என்று மொழிகின்றார். அறிவு வழி நில்லாது ஆசை வழிச் சென்று துன்பம் உறுவித்தலின், “மூடவேடர்” என்றும், அவற்றின் சேட்டையை அறக்கெடுத்து ஒடுக்கி ஆன்மவுணர்வின் வழி நிற்பிக்கும் நலத்தை, “முதலற எறிந்து வாகை யீகுவன்” என்றும் உரைக்கின்றார். வாகை - வெற்றி மாலை. மோக முதலிய ஆறனைத் துணைகொண்டு புலன் ஐந்தும் பகை செய்து அடர்க்க அவற்றை ஆன்ம வுண்ர்வு ஒன்றே உறுதி யுடனின்று வெற்றி பெறுதலால், “வாகை யீகுவன்” என ஊக்குகின்றார். வஞ்ச வாழ்க்கை - வஞ்சனை நிறைந்த வாழ்க்கை; பிரபஞ்ச வாழ்க்கை எனினும் அமையும். எதிர்கால நிகழ்ச்சியை உணராதவாறு மறைத்தும், இறந்த காலத்தை மறப்பித்தும் உயிரறிவை வஞ்சித்தலின், “வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் நெஞ்சே” என்று கூறுகின்றார். போகம் - கருவி கரணங்களால் நுகரப்படும் இன்பம் துன்பம் என்ற இரண்டுமாம். புண்ணியம் - நல்வினை. சாகை - சாதல். பெயரும் புகழுமின்றி வெறிதே சாகும் சாவு பயனில் சாவாதல் பற்றி, “சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத் தந்தை” என்றோதுகின்றார்.
இதன்கண், உலகியற் போகத்தை நீக்கி நல்வினை செய்து நாடோறும் இறைவனைப் போற்றிப் புகழ்வார்க்குப் புகழும் புண்ணியமும் நிறைதலால், பயனில் சாவு உண்டாகாது என்பதாம். (9)
|