793.

     பசிஎ டுக்குமுன் அமுதுசே கரிப்பார்
          பாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ
     வசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா
          மதியில் நெஞ்சமே வருதிஎன் னுடனே
     நிசிஎ டுக்குநல் சங்கவை ஈன்ற
          நித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச்
     சசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத்
          தந்தை யார்அடிச் சரண்புக லாமே.

உரை:

     நிலத்தில்வாழ் மக்கள் பசியெடுக்கு முன்பே வயிற்றுக்கு உணவினைச் சேகரிப்பார்கள்: அப்பண்பினை நீ அறியவில்லையோ? உடம்பின்கண் வசிக்கும் உயிர் நீங்குமுன், பின்னும் பிறத்தலை மாற்றற்கு ஆவன எண்ணாத அறிவில்லாத நெஞ்சமே, என்னுடன் வருக; இரவிருளைப் போக்கும் நல்ல சங்குகள் ஈன்ற முத்துக் குவைகள் நெறிப்பட வுயர்ந்து சந்திரனது ஒளியைச் செய்யும் நல்ல திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் அருட்செல்வத் தந்தையாகிய சிவபெருமான் திருவடியைப் புகலடைவோமாக. எ.று.

     பாரினோர் - பூவுலகில் வாழ்பவர். பசி வரும் என்பதை யுணர்ந்தே யாவரும் உணவு தேடுகின்றனரே யன்றி, பசி வந்தபின் தேடுவதிலர். வந்தபின் தேட முயலின், பசி மிக்குத் தேடற்கு வேண்டும் உடல் வன்மையைப் போக்கி விடுவதால், “பசியெடுக்கு முன் அமுது சேகரிப்பார்” என்று கூறுகின்றார். இச் செயல் எல்லா மக்களிடத்திலும் பொதுப் பண்பாக இருத்தல் பற்றி, “அப்பண்பறிந் திலையோ” என்று அறிவுறுத்துகின்றார். வசி என்றது ஈண்டு உடற்கண் வசிக்கும் உயிர் மேனின்றது. உடம்போடு கூடி நின்று அதனிடத்தமைந்துள்ள கருவி கரணங்களின் அசைவு அசைவின்மைகளாற் பிறக்கும் வினைவகையால் உயிர்க்கு வரும் பிறப்பு மாறுகின்றமையின், “வசி யெடுக்கு முன் பிறப்பதை மாற்றற்கு ஆவன செய்ய வேண்டும்.” என்று கூறுகின்றார். ஆன்மவுணர்வால் திருவருணெறி நின்று சிவஞானமெய்தல் மதி நுட்பம் நூலோடுடைமையின் பயனாதல் விளங்க, “மதியில் நெஞ்சமே” என உரைக்கின்றார். நிசி - இரவு. சங்கீன்ற முத்தங்களின் ஒளியால் இரவிருள் நீங்குதல் தோன்ற, “நிசி யெடுக்கும்” நற்சங்கு எனவும், கடலலைகளால் கரையிட்டது போல முத்துக்குவை ஒதுங்கி யிருப்பது “நெறிப்பட வகுத்தது” போலவுளது எனவும் அறிக. சசி - சந்திரன்.

     இதன்கண், உயிர் உடலின் நீங்குமுன் வரும் பிறப்பை மாற்றுதற்குரியபடி நல்வினைகளைச் செய்தல் வேண்டும் என்பதாம்.

     (10)