795.

     தவம தின்றுவன் மங்கையர் முயக்கால்
          தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
     இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
          எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
     பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
          பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
     உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
          ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

உரை:

     மங்கையரின் வன்மை சான்ற கூட்டத்தால் தவப்பயன் இல்லை; வஞ்சகரது பொல்லாச் சார்பால் அறப்பயன் யாதும் இல்லை; இவ்வகைச் செயல்களால் மிகவும் வருந்துவதால் ஒரு பயனும் இல்லையாம்; அதனால் மனமே, அழகு கொண்ட திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து, பிறவித் தொடர்பைப் போக்கி, நல்ல ஆனந்த உருப் பெறற்கமைந்த தன்மையைக் காட்டி, திருவருளாகிய நற்பதத்தைப் பெறுவிக்கும் சிவனடியார்கள் ஓதி உவகை மிகும் ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்று மனத்தின்கண் சிந்திப்பாயாக. எ.று.

     மங்கையர் மெல்லிய இயல்பினராதலின் வன்மை அவரது முயக்கிற்கு ஏற்றப்பட்டது. முயக்கு - கூட்டம். முயக்கம் பெற்றார் மனத்தை வன்மையுறப்பிணித்து, அதனை இடையீடின்றிப் பெறற்கு எப்போது நினைவு செயல்களை ஈடுபடுத்துவது பற்றி “வன்முயக்கு” என்று இசைக்கின்றார். மகளிர் முயக்கில் கருத்தைச் செலுத்தி, அதனைப் பெறற் பொருட்டுச் செய்யப்படும் முயற்சி தவஞ் செய்வோரது முயற்சியினும் பெரிதாதல் தோன்றும். கருதிய முயக்கம் பெற்றவன் அதனைத் தவப் பயனாகக்கருதுகின்றானாதலால், “மங்கையர் முயக்கால் தவம தின்று” என்று கட்டுரைக்கின்றார். வஞ்சித் தொழுகும் தீயவர் தமது வஞ்சம் புலப்படா வகையில் மறைத்துக் காண்பார் இவரின் மெய்யர் பிறர் இலர் என நினைந்துரைக்குமாறு நட்புச் செய்தல் பற்றி, அவரது தொடர்பைக் “கடுஞ்சார்வு” என்றும், அதனால் தீமையே விளைவது குறித்துத் “தருமம் இன்று” என்றும் வற்புறுத்துகின்றார். மகளிர் முயக்கமும் வஞ்சகர் நட்பும் தவமோ, தருமமோ பயவாது மிக்க துன்பத்தையே உண்டாக்குவதனால், “இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம்” என மொழிகின்றார். இவ்வகை - இ்வகை என விகாரம். பிறவியறாது மேன்மேலும் தொடர்தற்குரிய ஏதுக்களை வேரொடு களைவ தென்றற்கு, “பவமது ஓட்டி” என்றும், பிறவித் துன்பத்துக் கேதுவெனின், அதன் நீக்கம் இன்பப் பிறப்புக்கு ஏதுவாதல் இனிது விளங்குதலால், “ஆனந்த வுருவாம் பாங்கு காட்டி” என்றும், ஆனந்த வாழ்வுக்காம் பாங்கு பெற்றார்க்கு இடம் “செம்மையே யாய சிவபதம்” எனவும், அதனைப் பெறற்கமைந்த ஞானமும் ஒழுக்கமும் நல்கி மேன்மை யுறுவிக்கும் சிவனடியார் உபதேசித்து உய்விக்கும் திருமந்திரம் எனவும் தெரிவித்தற்கு, “நற்பதம் தரும் அடியார் உவகை ஓம் சிவசண்முக, சிவ ஓம், ஓம் சிவாய” என்றும் இயம்புகின்றார். அடியார்கள் ஓதி யுவகைமிகும் இத் திருப்பெயர்களை நீயும் ஓதி யுய்தி பெறுக என மனத்துக்குரைப்பதுபோல நம்மனோர்க்கு அறிவுறுப்பாராய், “உன்னுதி மனனே” என விளம்புகிறார்.

     இதனால், பவத்தைக் கெடுத்து ஆனந்த வாழ்வு பெறற்குரிய பாங்கு காட்டி நற்பதம் பெறுவிக்கும் அடியார்கள் ஓதி யுவகை யுற்றுயர்வது இத் திருவருட் பெயர்களின் நலம் என உணர்த்தியவாறாம்.

     (2)