796.

     மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
          வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
     இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
          எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
     பொன்உ லாவிய புயம்உடை யானும்
          புகழ்உ லாவிய புயம்உடை யானும்
     உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
          ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

உரை:

     மின்னலைப் போலும் நுண்ணிய இடையை யுடைய இளமகளிராகிய பெரிய பேய்களின் வெம்மை பொருந்திய சிறுநீர் வாயிலாகிய குழியின்கண் வீழ்ந்து மயங்கியது போகட்டும், இனி அதன்கண் விருப்பம் செய்தலை விடுக; உனக்கு ஒன்று உரைப்பேன்; அழகிய திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து, திருமகள் தங்கிய தோளையுடைய திருமாலும், புகழ் பொருந்திய தாமரைப்பூவை இடமாகவுடையவனாகிய பிரமனும் மானதமாய் ஓதும் ஓம் சிவசண்முக, ஓம் சிவ, ஓம் சிவாய என்ற திருநாமங்களை மனத்தில் எண்ணுக, எ.று.

     மின்னலைப் போலும் நுண்ணியதாகிய இடையை, “மின்னும் நுண்ணிடை” என்று உரைக்கின்றார். பெரிய ஆசை வடிவாய் இருப்பது பற்றிப் “பெரும் பேய்” எனக் கூறுகின்றார். கண்டார் கருத்தில் தன் வடிவழகைப் பொருத்தித் தீராப் பேராசையை நிலைபெறுவித்தலால் “பெரும் பேய்” என்கிறார் என்றுமாம். பெண்ணழகில் கருத்திழந்து அறிவு பேதுற்றார் பேய்கொண்டாற் போல்வது கொண்டு இவ்வாறு பேசுகின்றார் என்றுமாம். மகளிர் மகவுயிர்க்கும் உறுப்பே சிறுநீர் கழியும் வாயிலாதலின், அதனை “வெய்ய நீர்க்குழி” என்றும், அவரைக் கூடிப் பெற்ற மெய்யுறு புணர்ச்சியை “நீர்க்குழி வீழ்ந்தது” என்றும் பழிக்கின்றார். அதனை விலக்கும் கருத்தினால் இங்ஙனம் உரைக்கின்றார். அதனை, திங்கட் கிருமுறை யென்ற அளவிற் பெற்று மகிழ்தலை அறிவுடையோர் மறார். புணர்ச்சியே பொருளாகப் பற்றி அளவிறந் தொழுகுவார்க்கே இவ்வறவுரையாதலால், “இன்னும் வீழ்கலை” என அறிவுறுத்துகின்றார். வீழ்கலை என்றவிடத்து வீழ்தல் - விரும்புதல். திருவொற்றியூர் அடைந்து அங்கே கோயில் கொண்டிருக்கும் தியாகப்பெருமானைக் கண்டு வலம் செய்து வழிபட்டு ஓம் சிவசண்முக எனவும், ஓம் சிவ எனவும், ஓம் சிவாய எனவும் மானதமாய் ஓதுக என்பாராய், “ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே” என மொழிகின்றார். இவற்றை வெற்றித் திருவீற்றிருக்கும் தோளையுடைய திருமாலும், தாமரைப் பூ மேல் உறையும் பிரமனும் நாளும் மனத்தின் கண் வைத்து ஓதுகின்றனர் என்றற்குப் “பொன்னுலாவிய புயமுடையானும், புகழுலாவிய பூவுடையானும் உன்னும்” என்று வற்புறுத்துகின்றார்.

     இதனால், ஓம் சிவசண்முக என்பது முதலாக ஓதப்படும் திருவருட்பெயர்கள் திருமாலும் பிரமனும் நாளும் ஓதும் சிறப்புடையன வாதலால் நீயும் தவிராது ஓதுக என்பதாம்.

     (3)