798.

     வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
          மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
     இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
          எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
     கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
          கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
     உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
          ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

உரை:

     மலைபோன்ற முலையையுடைய மங்கையர்பால் கொண்ட காம மயக்கத்தால் மயங்கியும், வஞ்சகரது வஞ்சத்தால் துயருற்றும் வருத்தமெய்தித் துன்பமாகிய பெரிய கடலில் விழுந்து அயர்வுறுதல் வேண்டா; மனமே, அழகு பொருந்திய திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து, உள்ளத்தை நீராய் உருக்கும் தெளிந்த அமுதமோ, தேனோ, கனியோ என்னுமாறு சுவைத்து மிக்க கனிவுடன் மனத்துக்குள் ஓதும் ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்று எண்ணுவாயாக. எ.று.

     வரை - மலை. மகளிர் முலைக்குக் கற்பனை நெறியில் மலையை யுவமை கூறுவது கவி மரபு. அதுபற்றி, “வரைநேர் முலை மங்கையர்” எனவுரைக்கின்றார். மயல் - மகளிரால் உண்டாகும் காம மயக்கம். அதனால் அறிவு மயங்குவது பற்றி, “மயங்கி” என்றும், வஞ்சகர் செய்யும் வஞ்சனைகள் மிக்க வருத்தம் விளைப்பதுண்மையின் “வஞ்சரால் வருத்தமுற்று” என்றும், இரண்டாலும் மிக்க துன்பமுண்டாதல் கண்டு, “அஞராம் இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்” என்றும் இசைக்கின்றார். கடல் என்றமையின், அதற்கேற்ப முழக்கமுண்மை கூறுவாராய் “இரைக்கும் மாக்கடல்” என வுரைக்கின்றார். இறைவன் அருட்டிருப் பெயர்களை மனத்தின்கண் ஒன்றியிருந்து ஓதுமிடத்துச் சுரந்து பெருகும் இன்பத்தைத் “தெள்ளிய அமுதமோ தேனோ கனியோ” என்று சிறப்பிக்கின்றார். அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த சிவஞானிகளை “உயர்ந்தோர்” எனப் புகழ்கின்றார். தாம் உரைப்பது கேட்டுப் பிறரும் உரைத்துச் சிவானந்தம் பெறுக எனக் கருதுபவராதலால், அவர் செயலை விதந்து “உயர்ந்தோர் உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய” என எடுத்து மொழிகின்றார்.

     இதனால், ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என ஓதப்பெறும் திருவருட் பெயர்கள் உயர்ந்த சிவஞானிகளால் தெள்ளமுதமோ, தேனோ, கனியோ எனச் சுவைத்து உரைக்கப்படும் உயர்வுடையன வென்பதாம்.

     (5)