799. வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய்
மறலி வந்துனை வாஎன அழைக்கில்
ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
போது வைகிய நான்முகன் மகவான்
புணரி வைகிய பூமகள் கொழுநன்
ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
உரை: வாது புரிகின்ற இளமகளிரை விரும்பி வாழ்ந்தாய்; யமன் வந்து உன்னை வா என்று அழைக்கும்போது யாது செய்வாய்; மனமே, நீ அறிவில்லாமையால் ஏழையாயினை; ஐயோ, அழகிய திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து தாமரைப் பூவில் இருக்கும் நான்முகனும், இந்திரனும், கடலிற் பாம்பணையிற் கிடக்கும் திருமகள் கணவனான மாலும் ஓதி வழிபடும் ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்ற அருட் பெயர்களை எண்ணி இறைஞ்சுவாயாக. எ.று.
வாது - எதிர்வாதம்; ஊடியும் புலந்தும் எதிர் மொழி தந்து பிணங்குவது பற்றி, இளமகளிரை, “வாது செய் மடவார்” என்று குறிக்கின்றார். அடிக்கடி பிணங்கினும் வெறாது மகளிர் கூட்டத்தை விரும்பி இணங்கியும் வணங்கியும் வாழும் காமவாழ்வை விரும்புகின்ற நிலையை எடுத்து “வாதுசெய் மடவார்தமை விழைந்தாய்” என உரைக்கின்றார். இளமைப் பருவத்து மகளிரை மடவார் என்பது வழக்கு. மடம் - இளமை மேற்று. மறலி - இயமன். சாவு வரின் தடுத்தற்கு வலிய படை வேறு இல்லாமையின், “மறலி வந்து உனை வா என அழைக்கின் ஏது செய்வையோ” என இரங்குகின்றார். எத்தகைய மெய் வலியுடையாரும் அறிவால் வன்மையுடையார்முன் மெலியராய் எளியராய்த் தாழ்வது பற்றி, “ஏழை நீ” என்றும், “அந்தோ” என்றும் வருந்தி மொழிகின்றார். போது - தாமரைப் போது. “பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை” என்றனர் திருநாவுக்கரசர். யாகங்கள் பல செய்தமையால் இந்திரனானான் என்பது கொண்டு, அவனை மகவான் என்பர். மகம் - யாகம். புணரி - கடலில் தோன்றும் பேரலை; அஃது ஈண்டுக் கடற்காயிற்று. கொழுநன் - கணவன்.
இதனால், ஓம் சிவ சண்முக, ஓம் சிவ, ஓம் சிவாய என்ற திருப்பெயர்களைப் பிரமனும், இந்திரனும், திருமாலும் நாளும் ஓதி வழிபடுவர் என்பதாம். (6)
|