80. தேவர் நாயக னாகியே என்மனச்
சிலைதனி லமர்ந்தோனே
மூவர் நாயக னெனமறை வாழ்த்திடும்
முத்தியின் வித்தே யிங்
கேவ ராயினும் நின்றிருத் தணிகைசென்
றிறைஞ்சிடி லவரேயென்
பாவ நாசஞ் செய் தென்றனை யாட்கொளும்
பரஞ்சுடர் கண்டாயே.
உரை: தேவர்கட்கு நாயகனாய் என் மனமாகிய கல்லிற் பொறிக்கப் பட்டிருப்பவனே, மூவர்கட் கெல்லாம் தலைவன் என்று மறைகள் துதிக்கும் முத்திக்குக் காரணமாயவனே, இவ்வுலகில் நின் திருத்தணிகையை அடைந்து வணங்குபவர் யாவராயினும் அவர்கள் என் பாவ வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்டருளும் பரஞ்சுடராவர் காண், எ. று.
வழிபடு தெய்வங்களைக் கற்களிற் பொறித்துத் தெய்வத் தன்மை யுறுவித்துத் தெய்வ மெனக் கருதி வழிபடும் முறைமை பற்றி, “தேவர் நாயகனாகியே என் மனச்சிலையில் அமர்ந்தோனே” என்று கூறுகிறார். முத்திக்குக் காரணமாகிய சிவபரம் பொருளை மூவர் கோனாய் நின்ற முதற் பொருள் என்று மறைகள் ஓதுகின்றனவாதலால், “மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே” என்று மொழிகின்றார். “மெய்த் தொழில் புரிதொண்டரோடு இனிதிருந்தமையால், விண்டொழிந்தன நம்முடை வல்வினை” (வலஞ்சுழி) என்று ஞானசம்பந்தர் கூறுதலால், திருத்தணிகை சென்று வணங்கும் தொண்டர் எத்தகையராயினும் பாவமறுக்கும் பான்மையராம் என்பார், “இங்கு ஏவராயினும் நின் திருத் தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என் பாவம் நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர்” என்று உரைக்கின்றார். பரஞ்சுடர் - மேலான ஞான வொளிப் பொருளாகிய இறைவன். சிவபரம் பொருளை, நம்பி ஆரூரர், “பரமாய பரஞ்சுடர்” (மழபாடி) எனக் கூறுவது காண்க.
இதனால், தணிகை யடைந்து முருகப் பெருமானை வணங்கி வழி படுவோர் யாவரும் வினை யறுக்கும் விழுமியோ ராவர் என்பது தெரிவித்தவாறாம். (9)
|