800. நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
எண்ணும் என்மொழி குருமொழி ஆக
எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
உரை: மனமே, உன்னை யணைகின்ற மகளிரின் சிறுநீர் வாயிலாகிய புழுக்கள் வாழும் மலம் பொருந்திய குழியின்கண் நாளும் வீழ்ந்து நோயுற்று வருந்த வேண்டா; செய்கடன் எனக்கருதி யுரைக்கும் என் சொல்லைக் குருமொழியாகக் கொண்டு, திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து, புதிது செய்யப்படுகின்ற இனிய சுவையுடைய அமுதத்தினும் இனிமை மிக்கதாய், மெய்யன்பர்கள் நாடோறும் சித்தத்துட் கொண்டு சிந்திக்கும் ஓம் சிவசண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்ற திருப்பெயர்களை நினைவாயாக. எ.று.
போக நுகர்ச்சிக்கென வந்தடையும் மகளிரை “நண்ணும் மங்கையர்” என்றனர். அவருடைய சீறுநீர் கழி யுறுப்பின்கண் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் இருத்தலை இந்நாளைய மருத்துவ நூல்கள் (Vaginitis) விரித்துரைப்பது காண்க. இதுபற்றியே இவ்வுறுப்பைப் “புழுமலக் குழி” என்று குறிக்கின்றார். அதன்கண் வீழ்ந்தார் நோயுற்று வருந்துதல் நாடறிந்த செய்தியாதலால் “நாளும் வீழ்வுற்று நலிந்திடேல்” என அறிவுறுத்துகின்றார். நியதம் என்பது நிதம் என்று வந்தது; செய்கடன் என்பது பொருள். எண்ணி யுரைக்குமென்பது எண்ணும் என வந்தது. புறக்கணித் தொதுக்க வொண்ணாத சிறப்புடையது குரு மொழி; அதனால் “என் மொழி குருமொழியாக எண்ணுக” என வற்புறுத்துகின்றார். இயற்கை யமுது பால் எனவும், அதனோடு இன்சுவைப் பொருள்கள் கலந்து செயற்கையில் அமைவது செயற்கை யமுது எனவும் கூறுப. செயற்கை யமுது என்றற்கு “பண்ணும் இன்சுவையமுது” என்றும், சுவை மிகுதியால் இடைவிடற்காகாமை தோன்ற “நாளும்” என்றும், சிந்தனைக்கண் வைத்து நுகரப்படுமாறு புலப்படச் “சித்தம் உள்ளூற உண்ணும்” என்றும் இயம்புகின்றார். உண்டற்குரிய வல்லாதவற்றை உண்பதுபோல உரைத்தல் மரபு. (தொல். பொரு.)
இதனால், ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என வரும் அருட் பெயர்கள் பக்தர்களால் பண்ணும் அமுதம்போல் சித்தத்தால் உண்ணப்படும் என்பதாம். (7)
|