802. மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்
எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய்
எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
தட்டி லாதநல் தவத்தவர் வானோர்
சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
உரை: மனமே, தேன்போலும் சொல் வழங்கும் மகளிர் மார்பை விரும்பி அளவில்லாத வலிய துன்பத்தை யடைந்தாய்; எட்டி மரம்போல் பயனில்லாத மக்கள்பால் இரந்துண்டற்கு அலைகின்றாய்; இதனைக் கைவிட்டு, எழுச்சிகொண்ட திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து, குறைபாடில்லாத நல்ல தவமுடையவரும் தேவர்களும் மேலுலகடைந்தும் காண்டற்கு இயலாத தற்பரம் பொருளை வேண்டி ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்ற திருப்பெயர்களைச் சிந்திப்பாயாக. எ.று.
மட்டு - தேன். ஈண்டுத் தேன்போன்ற சொற்களைக் குறிக்கின்றது. விழைந்தாய், முற்று எச்சப் பொருளில் துயரடைதற்கு ஏது இதுவென காட்டுகிறது. பின்னின்ற மட்டென்ற சொல் அளவை யுணர்த்துகிறது. வன்துயர் - நீக்கற்கரிய வன்மை வாய்ந்த துயர். பூத்தும் காய்த்தும் கனிந்தும் பயன்படாதது எட்டிமரம்; அது போல்பவர் செல்வமுடையராயினும் வறுமை யுறினும் உலகிற்குப் பயன் சிறிதும் இன்மை பற்றி “எட்டியன்னர்” என்றும், அவர்பால் அடைந்து இரந்து ஒன்றும் பெறாது துன்பமிகுந்து வருந்தும் செயலை, “இரந்து அலைகின்றாய்” என வுரைக்கின்றார். தவத்துக்குத் தட்டு - இடையூறுகளால் குறைபடல். தட்டுத் தடையின்றி முற்றிய தவம் நன்மை பெரிதுடைய தென்பது பற்றி, “தட்டிலாத நல்தவம்” என்றும், அதனைச் செய்பவர் மக்களென்றும் அறிக. புண்ணியச் செயல்களால் மேலுலகடைந்த மக்கள் வானோர், தவமும் புண்ணியமும் உடையராயினும் ஞானமும் வீடுபேறும் விழையாமையால் பரம்பொருளின் பெருநிலையை அறியார் என்றற்கு “சார்ந்தும் காண்கிலார்” என்றும், அவர்க்குச் சார்வாய பதத்துக்கு அப்பாற்பட்ட தனிப்பெரும் பரம்பொருள் என்பது புலப்பட, “சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருள்” எனவும் விளக்குகின்றார். தற்பரம் பொருட்குரிய தனி நெறியில் நின்று அதன் திருப்பெயர்களை நெஞ்சிடை நிறுத்தி, “ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய” என்று உன்னுக என்று உரைக்கின்றார்.
இதனால், தவமுடைய நன்மக்களும் வானோரும் பரபதம் பெற்றும் ஞான நாட்டமின்மையின் காண்டற்கில்லாத தற்பரம் பொருளை நெஞ்சிடை ஒட்டி அதன் திருப்பெயரை உன்னுக என்றவாறாம். (9)
|