803.

     நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
          நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
     இலவு காத்தனை என்னைநின் மதியோ
          எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
     பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
          பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
     உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
          ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.

உரை:

     மனமே, விளக்கம் செய்யும் ஒள்ளிய மதி போன்ற முகமுடைய மகளிர் பொருட்டுத் துயருழந்தாய்; கீழ்ப்பட்ட நெஞ்சினையுடையவர் நெடுமனை வாயிலையடைந்து இலவு காத்த கிளிபோல் இரந்து நின்று ஏமாந்தாய்; உனது அறிவை என்னென்பது? எழுச்சியுடைய திருவொற்றியூர்க்கு என்னுடன் வந்து, பலவாகிய நூற்பொருளை ஆராய்ந்து, உண்மையை நன்குணர்ந்த மெய்ஞ்ஞானிகளின் உள்ளத் தாமரைதோறும் உலாவுகின்ற ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்ற திருப்பெயரை மனத்தின்கண் வைத்து உன்னுக. எ.று.

     நிலவுதல் - ஒளி செய்தல். கள்ளமில்லா முழுமதி போலும் முகம் என்றற்கு “ஒண்மதி முகம்” என்றும், மதிமுகம் படைத்த மங்கையரின் கூட்டம் நயந்து வருந்திய திறத்தை “உழன்றாய்” என்றும் உரைக்கின்றார். கீழ்மைப்படுத்தும் நினைவு செயல்களையுடைய கீழ்மக்களை, “நீச நெஞ்சர்” எனவும், பெருஞ் செல்வராதல் கண்டு அவரது பெருமனையடைந்து நெடிது காத்திருந்து ஒன்றும் பெறாது வெறிது திரும்பி வருந்திய செயலை, “நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற் போய் இலவு காத்தனை” எனவும் இயம்புகிறார். இலவின் காயைக்கண்டு அது பழுத்து இனிய பழமாம் என எண்ணிக் கிளிகள் காத்திருக்கும் என்றும், காய்த்துக் கனிந்த கனி, வெடித்துப் பஞ்சாய் உதிர்வது கண்டு நீங்கிப்போம் என்றும் உலகவர் கூறுதலால், அதனை “இலவு காத்தனை” என்றும் எடுத்து இயம்புகின்றார். இது மிக்க மடமை யுடையோர் செய்வினையாவது பற்றி, “என்னை நின் மதியோ” என வினவுகின்றார். இதனை “என்னையோ நின்மதி” என மாற்றிக் கொள்க. ஒவ்வொருவர்க்கும் அறிவும் சிந்தனையும் வேறுபடுதலால், அவர்தம் அறிவுக் கண்ணில் தோன்றும் கருத்துக்கள் பலவாதலின், அவர் எழுதும் நூல்களும் பலவாகின்றன. உண்மை காண்போர் அவை பலவற்றையும் கண்டறிதல் கடனாதலின் “பலவும் ஆய்ந்து” எனவும், ஆய்வின்கண் அறிவு கூர்மையுற்று மெய்ம்மையைக் காண்டலின் வெற்றி எய்துவது பற்றி, “நன்கு உண்மையை உணர்த்த” எனவும், உண்மையுணர்ந்தவர் அதன்பால் பேராப் பேரன்பு கொண்டு போற்றுவது கண்டு “உண்மையை யுணர்ந்த பத்தர்” எனவும் சிறப்பித்துரைக்கின்றார். அப்பத்தர்களின் மனத்தாமரையில் உண்மை யொண்பொருள் நிலையுற்று இன்பம் சுரப்பதனால், “உள்ளகப் பதுமங்கள் தோறும் உலவும்” என்று புகழ்ந்துரைக்கின்றார். அவ்வுண்மைப் பொருட்குச் சிவ சண்முக, சிவ, சிவாய என்ற அருட்டிருப்பெயர்கள் வழங்குதலால் அவற்றை மனத்திற் கொண்டு இடையறவின்றி எண்ணுக என்பாராய், “பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும் உலவும் ஓம் சிவ சண்முக, சிவ ஓம், ஓம் சிவாய என்று உன்னுதி” என மனத்துக்கு உரைத்தருளுகின்றார்.

     இதனால், சிவ சண்முக, சிவ, சிவாய என்ற திருப்பெயர்கள் பத்தர்கள் உள்ளகம் தோறும் உலவுவன; அவற்றை ஓவாது ஓதுதல் கடன் என்று உணர்த்தியவாறாம்.

     (10)