805. சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
ஓது சண்முக சிவசிவ எனவே
உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
உரை: மனமே, மாங்கனி போன்ற முலையையுடைய மகளிர் பொருட்டு அவர் மனையைச் சுற்றி யலைந்து நீ என்ன சுகம் கண்டாய்? நெஞ்சமே, வாழ்நாள் வீணே கழிகிறது; எழுந்திரு; சோலைகள் பொருந்திய திருவொற்றியூர்க்குச் சென்று, சான்றோர் ஓதும் சிவசிவ சண்முக என்று முருகன் திருப்பெயரை மனத்தின்கண் நினைந்து உருக்கம் உற்று முன்பு செய்த துயர் தரும் குற்ற வகையை எடுத்துரைத்து அப் பெருமானது அருளைப் பெறலாம்; அதன்கண் ஐயுற வேண்டா; என் மேல் ஆணை. எ.று.
இளமகளிரின் கொங்கைக்கு மாங்கனியை உவமித்துரைக்கும் மரபு பற்றி “சூது நேர்கின்ற முலைச்சியர்” என்று சொல்லுகின்றார். சூதம் - மாங்கனி; ஈற்று அம்முக் குறைந்து சூது என வழங்கும், அம்மங்கையரின் தொடர்பு பெறும் பொருட்டு அவர் தாம் வாழும் தெருவையும் மனையையும் சுற்றித் திரிவது காமக் காளையர் இயல்பாதலால், “சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாகச் சுற்றி நின்றது” எனவுரைக்கின்றார். அதனால் நிலைத்த இன்பம் பெறப்படாமையால் “சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய்” என்று வினவுகின்றார். பொழுது - போது என வந்தது; ஈண்டு அது வாழ்நாள் மேல் நிற்கிறது. சிவ சண்முகா எனவும், சிவசிவ எனவும் ஓதுவதும் சிவஞானிகள் செயலாதல் விளங்க “ஓது சண்முக சிவசிவ” எனக் கூறுகின்றார். “ஒற்றியம்புரி தனக்கேகிச் சண்முக சிவ சிவ என ஓது” என்று இயைப்பினும் அமையும். சண்முகப் பெயரை ஓதுவதால் கற்போல் உறைந்திருக்கும் நெஞ்சம் கட்டுவிட்டு நீராய் உருகும் என்பது தோன்ற, “உன்னி நெக்குவிட்டு உருகி” எனவும், உருகுமிடத்துப் பண்டு செயப்பட்டுச் செறிந்திருக்கும் குற்றமாவன நினைவின்கண் முற்பட்டுத் தோன்றக் கண்டு அவற்றைத் திருமுருகன்பால் எடுத்துரைக்கின் துன்பத்துக் கேதுவாகும் அவையனைத்தும் கெடும், உள்ளமும் தூய்மையுறும் என்றற்கு “துயராம் ஆது சொல்லுதும்” எனவும் உரைக்கின்றார். துயராம் அது என்பது எதுகை நோக்கி ஆது என நீண்டது. சொல்லியவிடத்து எய்தும் பயன் இது என்பார், “அவர் அருள் பெறலாம்” என்றும், அதன்கண் ஐயுறவு வேண்டா என்றற்கு “ஐயுறல்” என்றும், மேலும் வற்புறுத்தற்கு “என்மேல் ஆணை” என்றும் இசைக்கின்றார்.
இதனால், பொருட் பெண்டிர் மனைமுற்றத்தைச் சுற்றி நில்லாது திருவொற்றியூர் முருகப் பெருமான் திருமுன் நின்று மனத்துறு குற்றங்களை எடுத்துரைத்து அவன் திருப்பெயரைச் சிந்தித்தால் அவனது அருளைப் பெறலாம் என்பதாம். (2)
|