806.

     ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
          நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
     காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
          கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
     கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
          குழக வோஎனக் கூவிநம் துயராம்
     ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
          ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

உரை:

     நெஞ்சமே, நிலத்தின் மேல் வாழ்கின்ற வஞ்சகர்களின் வீடுகட்குச் சென்று இரந்து நின்றதனால் என்ன நன்மை கண்டாய், காலம் வீணிற் கழிகின்றது; இனி எழுவாயாக; யாவரும் நினைக்கும் திருவொற்றியூர் என்னும் கடிநகர்க்குச் சென்று அழகு திகழும் அருள் செய்யும் சண்முக சிவவோம், குழகனே ஓம் என்று சொல்லி நம்மை வருத்தும் துயரமாகிய நஞ்சவகையை எடுத்துரைத்து அவரது அருள் பெறலாம்; ஐயுற வேண்டா; என்மேல் ஆணை. எ.று.

     வஞ்சகர் நிலவுலகில் வாழ்தற்கேற்ற நலம் உடையரல்லர் என்பது கருத்தாகலின், “ஞாலம் செல்கின்ற வஞ்சகர்” எனக் கூறுகின்றார். உலகத்து மக்களை வஞ்சித்து நல்லவர் போல் நடிப்பவர் என்றற்கு இங்ஙனம் கூறுகின்றார் என்றலும் ஒன்று. கடை - ஈண்டு மனை முற்றத்தைக் குறிக்கின்ற தென்க. வஞ்சரென்றறியாது அவர் மனை வாயிலிற் பன்னாள் சென்று இரந்து நின்றமை புலப்பட, “கடைவாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய்” என உரைக்கின்றார். வஞ்சர் மனைவாய் நாளும் சென்று வறிது மீளுதலால் காலம் பயனின்றிக் கழிவது காட்டற்குக் “காலம் செல்கின்றது” எனவும், அதனை யெண்ணி ஊக்கமிழந்து வருந்தாமை வேண்டி, “எழுதி என் நெஞ்சே” எனவும் இசைக்கின்றார். தியாகப்பெருமான் திருக்கோயில் உண்மை பற்றிப் பலரும் விரும்பும் பண்புடையதென்றற்கு, “கருதும் ஒற்றியம் கடிநகர்” என்று குறிக்கின்றார். முருகப்பெருமானது அருளிருக்கை அப்பதிக்கு அழகு செய்வது விளங்க, “கோலம்செய்யருள் சண்முக சிவ ஓம்” என்று பரவுகின்றார். குழகன் - இளையன். திருமுருகன் திருமுன் நின்று சண்முக சிவ ஓம் எனவும், குழக ஓ எனவும் ஓதி வழிபடுக என்பாராய், “குழகவோ எனக் கூவி” என்றும், முருகன் திருப்பெயரை ஓதியபின் நினக்கு வந்துள்ள துயரத்துக் கேதுவாகிய குற்றச் செயல்களை நினைந்துரைக்க என்பார், “துயராம் ஆலம் சொல்லுதும்” எனவும், சொன்னால் அவனது அருள் கிடைக்கப்பெறலாம் என்றற்கு, “அருள் பெறல் ஆமே” எனவும், அதன்கண் ஐயம் கொள்ளவேண்டா என்றற்கு, “ஐயுறல் என்மேல் ஆணை காண்” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், திருவொற்றியூரில் முருகன் திருமுன் அடைந்து பரவி நம் குற்றங்களை நாமே யுணர்ந்து உரைத்தால் அவனது திருவருளைப் பெறலாம் என்று உரைத்தவாறாம்.

     (3)