807. மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
வாயில் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
சிவந மோஎனச் செப்பிநம் துயராம்
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
உரை: மனமே, அறிவை மயக்கி வஞ்சகம் நினைக்கும் கொடியவர்களின் மனையையடைந்து அவர் வாயிலில் இன்னும் காத்துக் கிடந்து வருந்துவதில் பயன் யாதாம்? மேற்செலவுக்குரிய ஒளியின்றி இருள் பரந்துவிட்டது; இனித் தாழாமல் எழுக; அழகிய திருவொற்றியூர் என்னும் திருப்பதிக்குச் சென்று அறிவு தெளிவு பெறற்குரிய வகைகளையுணர்த்தும் சண்முக சிவ ஓம், சிவ நமோ என்னும் திருப்பெயரை ஓதி நாம் வருந்தும் துயர்க்குக் காரணமாகிய தீமைகளை வாய்விட்டுரைப்போம்; அதனால், முருகன் அருள் பெறலாம்; ஐயுறற் கிடமில்லை; என்மேல் ஆணை. எ.று.
மருட்டுதல் - மயக்குதல். ஆகாதவற்றை ஆவன போலவும், தீயவற்றை நல்லன போலவும் காட்டி அறிவு மயங்கச் செய்தல் மருட்டுதல் என அறிக. மதித்தல் - நினைத்தல். அது நேரிய செயலன்மையின், அதனை செய்வாரைக் கொடியர் என்று கூறுகின்றார். வருக என்னாத வழி வெளியே வாயிலிற் காத்துக்கிடப்பது பயனில் செயலாதல் தெளிந்து, “வாயில் காத்தின்னும் வருந்தி என் பயனோ” என இயம்புகின்றார். ஒளியில் வழி நேரிய செயல் புரிதற் கிடமின்மையின், “இருட்டிப் போகின்றது எழுதி” என எடுத்து மொழிகின்றார். தெருள் திறம் - தெருளும் திறம்: அஃதாவது செய்வதை, தவிர்வனவற்றைத் தெளிந்து செயல் புரியும் அறிவு வகை. ஓம் சிவ சண்முக சிவநமோ என்று ஓதுவது முருகன் திருப்பெயரையே திருமந்திரமாகக் கொண்டு உரைப்பதாம்; அதனால், “சண்முக சிவ ஓம் சிவநமோ என செப்பி” மனத்தைத் தூய்மை செய்து கொள்ளுமாறு பணிக்கின்றார். மனத்தின் கண் படிந்திருக்கும் அழுக்கான எண்ணங்களை எடுத்துச் சொன்ன மாத்திரையே, மனம் தூய்மை எய்துதலின், “துயராம் அரிட்டை ஓதுதும்” என உரைக்கின்றார். அரிட்டை - அரிட்டம் எனவும் வழங்கும்; தமிழ்ச் சோதிட நூல்களில் பயில வழங்குவதொரு சொல்.
இதனால், முதுமையால் கண்ணொளி குன்றிச் செயற்குரிய ஆற்றல் குன்றி மயங்குதற்குள் முருகனையடைந்து பிழையுள்ளன எடுத்துரைத்து அவன் திருப்பெயரை ஓம் சிவ சண்முக, சிவ ஓம், சிவநமோ என ஓதுக என்று தெரிவித்தவாறு. (4)
|