809. கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
பரவு சண்முக சிவசிவ சிவஓம்
பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
உரை: உள்ளதை மறைத்து வஞ்சிக்கும் மனமுடையவர் மனைக்குச் சென்று வாயிலில் நின்று நின்றயர்கிறாய்; மனம் கலங்கி இனியும் நீ வருந்துவையாயின், பகலொளி போய் விரைவில் இருள் வந்து படியும்; ஆதலால், நெஞ்சமே, எழுக; அழகு கொண்ட திருவொற்றியூர்க்குச் சென்று, யாவராலும் பரவப்படும் சண்முக, சிவ சிவ, சிவ ஓம், பரசுயம்புவே, சங்கரா சம்பு நம ஓம் அரகர என்று ஏத்துவோம்; அதனால் அவரது அருளைப் பெறலாம்; இதில் ஐயம் இல்லை, என் மேல் ஆணை. எ.று.
கரவு - மறைத்தல்; வஞ்சனையுமாம். கடைத்தலை - மனை முற்றம். நாளும் சென்று உதவி வேண்டி வெறிது பெயர்ந்தமை புலப்பட, “கடைத்தலைக் குழன்றாய்” என்று கூறுகின்றார். வேண்டுவதொன்று பற்றிப் பன்னாள் முயன்றும் கைவிடாவிடத்தும் மனம் வலி குன்றிக் கலங்கிக் கலங்கி வடிப்பது பற்றி, “கலங்கி நீ இன்னும் கலுழ்ந்திடில்” என்று இயம்புகின்றார். கலுழ்தல் - கண்ணீர் சொரிதல். இரவு, இருட்போது, தேவர் முனிவர் முதல் பலராலும் பரவப்படுவது பற்றிப் “பரவு சண்முக சிவசிவ சிவ ஓம், பரசுயம்பு சங்கர சம்பு நம ஓம், அரகர என்று” ஏத்துவோம் என உரைக்கின்றார். தடையின்றி அருள் பெறலாம் என்பதை வற்புறுத்தற்கு, “அவர் அருள் பெறலாம், ஐயுறல், என்மேல் ஆணை” என்று இயம்புகின்றார்.
இதனால், சண்முக சிவசிவ என வரும் தேவர் முதல் பலரும் பரவும் பெருமை வாய்ந்தது என்றும், “ஓதுவோர் அருள் பெறுவது உறுதி” யென்றும் தெரிவித்தவாறு. (6)
|