81. கண்டனேக வா னவர்தொழும் நின் திருக்
கழலிணை தனக்காசை
கொண்ட னேகமாய்த் தெண்டனிட் டானந்தக்
கூத்தினை யுகந்தாடித்
தொண்ட னேனும்நின் அடியரிற் செறிவனோ
துயருழந்தலை வேனோ
அண்டனே திருத்தணிகைவாழ் அண்ணலே
அணி கொள்வேல் கரத் தோனே.
உரை: திருத்தணிகையில் எழுந்தருளும் முருகப் பெருமானே, அழகு பொருந்திய வேற்படை யேந்தும் கையையுடையவனே, தேவ தேவனே, தேவர்கள் போந்து கண்ணாரக் கண்டு பரவுகின்ற நின்னுடைய கழலணிந்த திருவடியின்பால் ஆர்வமுற்றுப் பற்பல தெண்டனிட்டு வணங்கி ஆனந்தக் கூத்தினை விருப்புடன் ஆடித் தொண்டனாகிய யானும் உன்னுடைய அடியார் கூட்டத்திற் பொருந்துவேனோ, அன்றிப் பிறவித் துன்பமுற்று வருந்தி அலைவேனோ, ஒன்றும் தெரிந்திலேன், எ. று.
அண்ணல் - தலைவன்; பெருமானுமாம். ஏனையோர் படைபோற் புலவு நாறாமல் தெய்வ மணம் கமழுவதாகலின், முருகனது வேற் படையை, “அணிகொள் வேல்” என்றும், அதனை எப்போதும் ஏந்தும் ஏற்ற முடைமையால் “வேற்கரத் தோனே” என்றும் புகழ்கின்றார். முருகன் திருவடியைத் தொழும் தேவர் மிகப் பலராதல் பற்றி, “அநேக வானவர்” எனவும், வானின் றிழிந்து தணிகை போந்து திருமுன் சென்று கண்டு வழிபடுமாறு விளங்க, “கண்டு அநேக வானவர் தொழும் நின் திருக் கழலிணை” எனவும் இயம்புகின்றார். திரு, கழலணிந்திருக்கும் பாதத்தைச் சிறப்பிக்கிறது. தெண்டனிடுதல், அடியற்ற மரத்தண்டு போல் வீழ்ந்து வணங்குதல்; அது தெண்டன் என்று வழங்குகிறது. வணங்கி வழிபடுங்காற் சுரக்கும் இன்பத்தால் அன்பு மீதூர்ந்து ஆடும் திறத்தை “ஆனந்தக் கூத்தினை யுகந்தாடி” என்று இசைக்கின்றார். அடியார் கூட்டம் ஞானச் சூழலாதலால் அதனைச் சேர்வது ஞானப் பேற்றுக்கும் முத்தி யின்பத்துக்கும் ஏதுவாதலால், “தொண்டனேனும் நின் அடியரிற் செறிவனோ” என்றும், தீவினையின் குறுக்கீட்டால் பிறவித் துன்பத்தில் ஆழ்ந்து போவேனோ என்பார், “துயருழந்து அலைவேனோ” என்றும் கூறுகின்றார்.
இதன்கண், தொண்டனாகும் பேறு தமக் கெய்துமோ என வள்ளற் பெருமான் எண்ணி வருந்துமாறு காணலாம். (10)
|