810.

     ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
          இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
     சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
          தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
     வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
          வரசு யம்புசங் கரசம்பு எனவே
     ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மே
          ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.

உரை:

     வஞ்சகர்பால் ஏமாந்து அவர்கள் மனைமுற்றத்துக்குச் சென்று வெறிது மீண்டு மனம் வருத்தமுற்று இருக்கின்றாய்; இனி, உனக்கு வாழ்நாளாகிய சிறுபொழுது தானும் கழிந்து போகின்றது: தாழாது எழுவாயாக; தகை சான்றதாகிய ஒற்றியூர் என்னும் திருப்பதிக்குச் சென்று மனம் ஒருமை யுறப்பெற்று சண்முக நம, சிவ ஓம், வரசுயம்புவே, சங்கர சம்புவே என்று தெளிந்து போற்றுவோமாக; போற்றினால் அவரது அருள் பெறலாம்; ஐயுற வேண்டா; என் மேல் ஆணை. எ.று.

     ஏய்த்தல் - ஏமாற்றல். ஏய்ப்ப ஏமாந்த செயலை, ஏய்ந்து என இசைக்கின்றார். கடைத்தலை - மனைவாயில், வாழ்நாளின் சிறுமை புலப்பட, “இச்சிறு பொழுது” என உரைக்கின்றார். பொழுது சாய்கிறது - பகற்போது கழிதலைக் குறித்தற்குத் தொண்டை நாட்டவரும் நடு நாட்டவரும், “பொழுது சாய்கிறது” என்பர். தகை - அழகு. வாழ்வற்குத் தகுதி நல்குவது பற்றித், “தகை” என்கின்றார் போலும். வாய்த்தல் - ஈண்டு மனம் செயல்மேல் ஒன்றியிருத்தல். சுயம்பு மூர்த்தத்துள் மேலானதென்றற்கு வரசுயம்பு என்று கூறுகின்றார். பொழுதும் இடமும் நோக்கித் தக்கது தேர்ந்து செய்யுமாறு புலப்பட, “ஆய்ந்து போற்றுதும்” என அறிவிக்கின்றார்.

     இதனால், திருவொற்றியூர்க்கேகி முருகன் திருமுன் நின்று சண்முக நம, சிவசிவ ஓம், வரசுயம்பு, சங்கர சம்பு எனப் போற்றினால் அவன் அருள் பெறலாம் என்பது உணர்த்தியவாறாம்.

     (7)