811. ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
ஓர்ந்து சண்முக சரவண பவஓம்
ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
உரை: வாளால் அரியும் நெஞ்சினையுடைய கொடியரிடம் சென்று உதவி வேண்டித் துன்புற்றாய்; இனி அதனை யொழிக; நாம் வாழ்தற் கென்றமைந்த சிறுபொழுதும் கழிந்தொழிகின்றது; நெஞ்சமே, எழுக; உயர்ந்த ஒற்றியூர் என்ற பெரிய தலத்துக்குச் சென்று முருகப்பெருமான் திருமுன் சென்று சண்முக சரவண பவ ஓம், ஓம் சுயம்பு சங்கர சம்பு என மனமார நினைந்து வாயாரச் சொல்லிப் போற்றுவோம். அவரது அருளைப் பெறலாம்; அதன்கண் ஐயுற வேண்டா; என்மேல் ஆணை, எ.று.
ஈர்தல் - வாளால் அரிதல். வாளால் அரிதற்கு வேண்டும் கொடுமை நிறைந்த மனமுடையாரை, “ஈர்ந்த நெஞ்சினர்” எனவுரைக்கின்றார். அவரிடம் செல்வதே தீது. உதவி நாடிப் பன்முறை அவர்மனை நாடிச் சென்று அலைவது பெருந்துன்பம் என்றற்கு, “இடந்தனில் இருந்து இடர் கொண்டாய்” என இரங்குகின்றார். வாழ்நாளின் சிறுமை புலப்படுத்தற்கு “இச்சிறு பொழுது” எனவும், கணந்தோறும் அது கழிந்தவண்ணம் இருப்பதைக் காட்டற்குப், “பேர்ந்து போகின்றது” எனவும், சிறிது தாழ்கினும் காலக் கேடாம் என்றற்கு “எழுதி” எனவும் இசைக்கின்றார். சிறு தெய்வ முன்றில்கள் பல இருத்தலின், அவற்றை விலக்கி முருகன் திருமுன்பைத் தெரிந்து சென்றடைக என்பாராய், “ஓர்ந்து” என்கின்றார். மனத்தால் நினைதற்கும் வாயால் ஓதுதற்கும் உரிய திருப்பெயர்கள் இவை என்பார். “ஓம் சண்முக சரவண பவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு” என உரைக்கின்றார்.
இதனால், திருவொற்றியூர்க் கோயிலுள்ளும் முருகன் திருமுன்பைத் தெரிந்தடைந்து மனமொழிகளால் முறையே சிந்தித்து ஓதுக என அறிவுறுத்துவது காணலாம். (8)
|