812. கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
எமைப்பு ரந்தசண் முகசிவ சிவவோம்
இறைவ சங்கர அரகர எனவே
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
உரை: பொறுத்துக் கிடக்கினும் சிறிதும் ஈயாத வஞ்சகர் மனைவாயிலையடைந்து பன்னாள் காத்திருத்தலைக் கைவிடுக; வாய்த்துள்ள இக்காலமும் இமைநேரத்தில் விரைந்து கழிகின்றது; நெஞ்சே, எழுக; அழகிய திருவொற்றியூர்க்குச் சென்று, எங்களைப் புரந்தருளும் சண்முக சிவ ஓம், இறைவ சங்கர அரகர என்று அமைந்தவாறு ஏத்தித் தொழுவோம்; அதனால் அவரது அருளைப் பெறலாம்; ஐயுற வேண்டா; என்மேல் ஆணை. எ.று.
கமைத்தல் - பொறுத்தல்; செல்வர்பால் இரந்து நிற்குமிடத்து அவர் ஏசிக் கூறுவனவற்றைச் செவியிற் கேட்டுப் பொறுத்துக் கிடப்பின் ஒருகால் சிறிது ஈவர் என்று எண்ணுவோருண்டு. அவ்வழியும் கொடுப்பார் போல வஞ்சித்துக் கொடாதொழிபவர் பலர் உளர்; அவர் மனை வாயிலை யடைந்து காத்திருத்தல் கூடாது என்றற்குக் “கமைப்பின் ஈகலா வஞ்சகர் கடையைக் காத்திருக்கலை” என்று அறிவுறுத்துகின்றார். நில்லாது பெயர்ந்தோடும் இயல்பிற்றாகிய காலத்தின் அருமையை உணராத மடமை நம் நாட்டவர்க்குப் பிறவியிலே அமைந்த ஒன்று. விஞ்ஞான நெறியில் அறிவு எத்துணையோ கூர்மையாகச் சிறந்திருப்பினும், காலத்தைப் போற்றிப் பயன்கொளும் பண்பாடு இன்னமும் உண்டாகாமை யெண்ணியே, இப்பொழுதும் கடுகி இமைப்பில் போகின்றது” என்று புகல்கின்றார். இடுக்கண் காத்து நல்லறிவு தந்து உதவுவது முருகன் திருவருள் என்பது பற்றி, “எமைப்புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர” என்று எண்ணி ஓதி வழிபடுக என அறிவிக்கின்றார்.
இதன் மூலம், முருகனை நமக்கமைந்த அளவில் காலமறிந்து வழிபடல் வேண்டுமென்று வற்புறுத்தினாராயிற்று. (9)
|