813. உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
நிறைந்த சண்முக குருநம சிவஓம்
நிமல சிற்பர அரகர எனவே
அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
உரை: வஞ்ச நெஞ்சமுடைய செல்வர் மனையடைந்து இரத்தற்கு உறைப்புண்டு அவர்முன் குறையிரந்து வீண்காலம் போக்குகின்றாய்; இப்பொழுது எடுத்துரைக்கும் இச்சிறுபொழுதும் சிறிது சிறிதாய்க் குறைகின்றது; ஆதலால் நெஞ்சே, நீ எழுக; புகழ் பொருந்திய திருவொற்றியூர் என்ற தலைநகர்க்குச் சென்று அருள் நிறைந்து விளங்குகின்ற சண்முக, குருவே நம, சிவ ஓம், நிமல சிற்பர அரகர என்றெல்லாம் சிந்தித்தும் செப்பியும் போற்றுவோம்; அதனால் அவரது அருள் பெறலாம்; ஐயுற வேண்டா; என்மேல் ஆணை. எ.று.
மான வுணர்வுடைய எவர்க்கும் ஒருவரை யடைந்து பன்முறையும் இரத்தற்கு மனம் ஒவ்வாது; மானமிழந்தோர் இரத்தலில் உறைத்து நிற்பது கண்டு அடிகளார் “உறைந்து வஞ்சர்பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய்” என்று இரங்கி உரைக்கின்றார். பன்முறையும் பன்னாளும் குறையிரத்தலால் பயனின்மையுடன் காலமும் வீணிற்கழிவதை எடுத்துக் காட்டுவாராய், “இனி உரைக்கும் இப்பொழுதும் குறைந்து போகின்றது” என்று குறித்துரைக்கின்றார். அறைதல் - சொல்லுதல்.
இதனால், இப் பதிகமுற்றும் கூறியதுபோல் இதன்கண்ணும் ஈயாது வஞ்சிப்போர் மனைவாயிலையடைந்து இரத்தற் றொழிலில் மனம் உறைத்து நிற்றல் கூடாதென்பதை வற்புறுத்துகின்றார். (10)
|