23. நமச்சிவாய சங்கீர்த்தன
லகரி
நமச்சிவாய என்பது சிவபெருமானுடைய திருப்பெயர்களில் ஒன்று. “நாதன் நாமம் நமச் சிவாயவே”
என்று ஞானசம்பந்தரும், “எந்தையார் திருநாமம் நமச்சிவாய” என நாவுக்கரசரும் கூறுவர். இதன்கண்
புள்ளியில்லாத எழுத்துக்கள் ஐந்தும் திருவைந்தெழுத் தெனப்படும். இவை நமச்சிவாய என்ற
பெயரிலிருந்து எடுக்கப்படுதலால், “படைக்கலமாக உன் நாமத் தெழுத்தஞ்சும் என் நாவிற்
கொண்டேன்” என்று நாவுக்கரசர் நவின்றுரைக்கின்றார். நமச்சிவாய என்ற பெயர் இறுதியில்
மகரம் பெற்று நமச்சிவாயம் என்று வழங்குதலுண்டு. “சீரார் நமச்சிவாயம் சொல்லவல் லோம்
நாவால்” (நாமார்க்கும்) என நாவுக்கரசர் உரைப்பர். இதனைப் பின்பற்றியே வடலூர் அடிகளாரும்,
“நமச்சிவாயத்தை நான் மறவேனே” என்ற தொடரை இத் திருப்பதியத்தின் பாட்டுதோறும், மகுடமாக
நிறுத்திப் பாடுகின்றார். பிறிதொரு பதிகத்தில் “நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே”
என்று பாடுகின்றார். சிவாய நம என்ற எழுத்தைந்துக்கும் முதலாக விளங்குதலின், நமச்சிவாய என்ற
திருப்பெயரைச் சிவபுராணத்தில் எடுத்த எடுப்பில் நிறுத்தி மணிவாசகர் வாழ்த்துகின்றார்.
சங்கீர்த்தன லகரி என்றதன் பொருளை முன்னரே யுரைத்தாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் 814. சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
உரை: சொல்மாலை விரும்பித் தொடுக்கும் தொண்டர் மனத்தில் உரிமையுடன் வந்து தோன்றிய துணைவனும், ஏழையேனுடைய கற்போன்ற மனமும் கரைந்து மகிழுமாறு கலந்திடுகின்ற களிப்பாகின்றவனும், மழை முகில்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் தேன் போன்றவனும், தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடி உயிர்கட்கு நல்ல வாழ்வு தருபவனும், நான்காகிய மறைகளின் பொருளானவனுமாகிய நமச்சிவாயத்தை நான் மறப்பேனல்லேன். எ.று.
பூமாலை தொடுப்போர் புதிய நறிய பூக்களைத் தேர்ந்து கொள்வது போலச் சொல்மாலை தொடுக்கும் தொண்டர் இனிய அழகிய சொற்களை விருப்புடன் தேடித் தொகுப்பது உண்டு. அதனால் அவர்களைச் “சொல் அவாவிய தொண்டர்” என்று வடலூர் வள்ளல் சிறப்பித்துரைக்கின்றார். தீவிய சொற்களைக் காணும் போதெல்லாம் அவர்களுடைய மனம் சிவபெருமான் திருவடிக்குச் சொல்மாலை தொடுத்து அணிந்து இன்புறுமாறு பற்றி, அவரது மனத்தை விதந்து மொழிகின்றார். அத்தகைய நல்லன்புடைய மனத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு மிக்க உரிமையுடன் எழுந்தருளித் துணைசெய்யும் சிவனதருட் செயலைப் பாராட்டி, “சுதந்தரம் கொடு தோன்றிய துணையை” என்று பாடுகின்றார். அன்பால் மெல்லியராகிய தொண்டர் மனத்தில் சுதந்தரத்துடன் எழுந்தருளும் பெருமான், கல்லினும் வலிதாய் இரக்கப் பண்பில்லாத ஏழையாகிய எளியோன் நெஞ்சும், நீராய் உருகி அவனது திருவருளிற் கலந்து உவகை மிகுந்து இன்புறச் செய்யும் அருணலத்தை நினைந்து, “ஏழையேன் நெஞ்சும் கரைந்து உவந்திடக் கலந்திடும் களிப்பை” என்று மகிழ்ந்துரைக்கின்றார். கல்லவாவிய நெஞ்சம் - கற்போன்ற நெஞ்சம் என்னும் பொருளது, நல்லறிவில்லாரை ஏழை என்பது தமிழ் மரபு. செல், ஈண்டு மழை முகில். வானளாவ உயர்ந்த மரங்கள் மழை முகிலைத் தரையிற் பொழியுமாறு ஈர்க்கும் தன்மையுடையவாதல் பற்றி, உயரிய மரம் நிறைந்த சோலைகளை நகர்ப்புறங்களில் வைத்து வளர்ப்பது பண்புடையோர் மரபு. நினைந்தவழி நாவில் நீர் சுரப்பிக்கும் தேன்போல அன்பால் நினைந்து வழிபடுவோர்க்கு இன்புறு தேன் அளித்துஊறுவது பற்றி, “தேனை” என்றும், தில்லையிற் சிற்றம்பலத்தில் கூத்தாடு மாற்றால் உயிர்களைப் பற்றி மறைக்கும் மலவிருள் நீங்குவதும், திருவருள் ஞானம் தோன்றிச் சிவானந்தப் பெருவாழ்வளிப்பதும் கருத்திற்கொண்டு, “தில்லைச் சிற்றம்பலத்தாடும் நல்ல வாழ்வை” என்றும் புகழ்ந்து பாடுகின்றார். மறை நான்குக்கும் உரிப்பொருளாவது கொண்டு “நான்மறைப்பொருள்” என்று கூறுகின்றார். “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என ஞானசம்பந்தர் நவில்வது பற்றி, “நான்மறைப் பொருளை நமச்சிவாயத்தை நான் மறவேனே” எனவுரைக்கின்றார்.
இதனால், தொண்டர்க்குத் துணையாய், அன்பர் மனமுருக்கியினிக்கும் பொருளாய், அம்பலத்தாடி நல்வாழ்வு தருவதாய், வேதத்தின் மெய்ப்பொருளாய் உள்ள சிவன் திருநாமமாகிய நமச்சிவாயத்தை மறத்தல் ஆகாது என்பதாம். (1)
|