815.

     அட்ட மூர்த்தம தாகிய பொருளை
          அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
     விட்ட வேட்கையர்க் கங்கையின் கனியை
          வேத மூலத்தை வித்தக விளைவை
     எட்ட ரும்பர மானந்த நிறைவை
          எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
     நட்டம் ஆடிய நடனநா யகத்தை
          நமச்சி வாயத்தை நான்மற வேனே.

உரை:

     நில முதலிய எண்வகை மூர்த்தமாகிய பொருளும், தேவர் முதலிய பலரும் அறியவொண்ணாத கூறுபாடுடையதும், புலன்கள் மேற் செல்கின்ற ஆசைகளை விட்ட பெரியோர்கட்கு அங்கை நெல்லிக்கனி போல் எண்பொருளாயிருப்பதும், வேதங்களனைத்துக்கும் மூலமாயிருப்பதும், ஞானத்திற்கு விளைவாக இருப்பதும், கருவி கரணங்கட்கு எட்டாத பரமானந்த நிறைவாக இருப்பதும், எங்கும் பரந்து நிறைந்து விளங்கும் ஒளியாக இருப்பதும், அம்பலத்தின்கண் நடம்புரிந்த நடனங்கட்கு நாயகமாயிருப்பதுமாகிய நமச்சிவாயத்தை நான் மறக்ககில்லேன். எ.று.

     நில முதலிய பூதமைந்தும், ஞாயிறு திங்கள் உயிர் என்ற மூன்றும் சேர எட்டன் உருவாவது சிவமென்பது பற்றி, “அட்ட மூர்த்தமாகிய பொருளை” என்று கூறுகின்றார். “அட்ட மூர்த்தியாகிய அப்பரோ” (மறைக்) என நாவுக்கரசர் நவில்வது காண்க. மூர்த்தம் - உருவம். தேவர் முதல் மக்கள் ஈறாக உள்ள அறிவுடைய பொருள் எவற்றாலும் அறியப்படாத இயல்பினதாவது பற்றி, “அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை” என்று இயம்புகின்றார். ஆதியோர் - முதலியோர். அறிகிலாத் திறம் என்பது எவ்வாற்றனும் அறியப்படா தென்பதன்று; அப் பெருமானது திருவடி ஞானத்தாலன்றிப் பிறவாற்றால் அறியப்படாதென்பது அறிக. விட்ட வேட்கையர் என்பதை வேட்கையை விட்டவர் என்று மாறுக. இல்லா அறிவினர் என்றாற்போலக் கிடந்தபடியே கொள்ளினும் அமையும். அங்கைக்கனி - அங்கையிற் கொண்ட நெல்லிக்கனி. எண்பொருள் என்றற்கு இவ்வாறு உரைப்பது மரபு. அறிவு நூல்கள் அனைத்திற்கும் மூலமாகிய அறிவுப்பொருள் அவனாதலின் “வேதமூலத்தை” என்று சொல்லுகின்றார். வேதம் - அறிவுநூல், வித்தகம் - ஞானம். வேதநூற் பயிற்சி வேறு, ஞானம் வேறாதலின், வித்தகவிளைவை வேறாகக் கூறுகின்றார். ஆனந்தம் கருவிகட்கு எட்டவல்லது. பரமானந்தம் நுண்ணிய கருவிகளால் நுகரவல்லது. உடலிடத்து இருவகைக் கருவிகட்கும் எட்டாமல், யோக நெறியில் உணரப்படும் பரமானந்தத்தை “எட்டரும் பரமானந்த நிறைவை” என்று இசைக்கின்றார். எங்கும் நிறைந்திருப்பது பற்றி இறைவனை, “எங்கும் ஆகிநின்று இலங்கிய ஒளி” எனக் குறிக்கின்றார். இப் பரம் பொருட்கு நமச்சிவாயம் என்பது ஒரு பெயராதலால், “நமச்சிவாயத்தை நான் மறவேனே” என உரைக்கின்றார்.

     இதனால், அட்ட மூர்த்தமும் வேத ஞான விளைவும் பரமானந்த நிறைவும், நடனக் கலையின் நாயகமுமாகிய சிவம் நமச்சிவாயம்; அதனை நான் மறவேன் என்பதாம்.

     (2)