816.

     உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
          உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
     தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
          சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
     பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
          பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
     நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
          நமச்சி வாயத்தை நான்மற வேனே.

உரை:

     தேவர்கட்குண்டான மிக்க துன்பத்தை நீக்கின சிவனும், அறிவுடை நன்மக்கள் பலரும் வழிபடும் உத்தமமான பரம்பொருளை, தூண்போல இருந்து அண்டங்கள் அனைத்தையும் தாங்கும் சாம்புவும், சிவதருமம் செய்த வழி உண்டாகும் நற்பயனும், நெருங்கிய சிறந்த அருளைப் பொழியும் மேகம் போன்றவனும், மேலான ஞானமாய் இருப்பவனும் மேம்பட்ட ஞானவின்பத்தை, தன்னை நம்பின மக்களை நல்வாழ்வில் இருத்தும் நன்பொருளும் ஆகிய நமச்சிவாயத்தை நான் மறக்ககில்லேன். எ.று.

     உம்பர் - மேலிடம்; இங்கே தேவர்கள் வாழும் மேலுலகத்தைக் குறிக்கிறது. வான்துயர் - மிக்க துன்பம். மக்களினும் பெயராதலின் தேவர்கட்கு வரும் துன்பமும் ஏனைத் தேவர்களால் போற்றற்கரிய பெருந்துன்பமாம்; ஆதலால் அதனைப் போக்குதற்குத் தேவனாகிய சிவபரம்பொருள் வேண்டப்படுதலின், “வான்துயர் ஒழித்தருள் சிவத்தை” என்று உரைக்கின்றார். உலகம் என்ற சொல் மக்களில் உயர்ந்தோரைக் குறிக்கும்; பல்வேறு சமயங்களினுள்ளும் ஞானவொழுக்கங்களால் உயர்ந்தோர் பாராட்ட விளங்குவது பரம்பொருளாதலின் அதனை “உலகெலாம் புகழ் உத்தமப் பொருள்” என்று கூறுகின்றார். தம்பம் - தூண். அண்டங்கள் அனைத்தும் தலைதடுமாறி வீழ்ந்து கெடாதவாறு சம்புவாகிய சிவன் தூண்போல நின்று தாங்குகின்றான் என்பதுபற்றித் “தம்பமாய் அகில அண்டமும் தாங்கும் சம்பு” என்று போற்றுகின்றார். சிவனை நோக்கிச் செய்யப்பட்டுப் பெரும் பயன்விளைக்கும் நல்வினை ஈண்டுச் சிவதருமம் எனப்படுகிறது. இறைவனுடைய திருவடியினும் அவனது திருவருள் மிக்க பெருமை வாய்ந்த தென்றற்குப் “பம்புசீர் அருள்” எனவும், அதனை மழை போல்நல்குவது விளங்கப் “பொழிதரு முகில்” எனவும் பாராட்டி யுரைக்கின்றார். சிவத்தின் வேறாயுள்ள பொருள்களைபபற்றி யுரைக்கும் ஞானம் மேலாய வன்மையின், சிவஞானத்தைப் “பரம ஞானம்” என்றும், ஞானத்தால் உளதாகும் இன்ப வாழ்வைப் “பரம சிற்சுகம்” என்றும் கூறுகின்றார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற உலகுரை பழுதாவதின்மையின், “நம்பினோர்களை வாழ்விக்கும் நலம்” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், நமச்சிவாயத்தால் குறிக்கப்படும் பரமன் உம்பர்தம் துன்பம் ஒழித்து அகில அண்டங்களைத் தாங்கி பெருகப் பொழிந்து நம்பினோர்களை வாழ்விக்கும் நலமாம் என்பது பெற்றாம்.

     (3)