817. மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
உரை: திருமால் தன் முடிமேல் வைத்து வணங்கும் பெரிய மணி போல்பவனும், துதிக்கின்ற நாவின்கண் சொல்லாய் மணம் கமழும் நல்ல மலர் போன்றவனும், பசுவின் பாலின் உள்ளே அமைந்த இனிமையாய் ஓங்கிய சுவைபோல்பவனும், பத்தர்களின் உள்ளத்தே உணரப்படும் பழம் போல்பவனும், பெரு வெள்ளம் தங்கிய ஆனந்தமாகிய கடல் போன்றவனும், அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அமுது போன்றவனும், நான்காகிய வேதங்கள் முழங்கும் திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் சிவபெருமானுமாகிய நமச்சிவாயத்தை நான் மறக்ககில்லேன். எ.று.
திருமால் முடி சாய்த்து வணங்கும் பெருமானாதலால், “மாலின் உச்சி மேல் வதிந்த மாமணி,” என்று சிவனைக் குறிக்கின்றார். சிவந்த மாணிக்கமணியின் நிறம் உடையனாதலால், “மாமணி” எனல் பொருத்தமாயிற்று. சிவன் திருப்பெயரைப் பன்முறையும் நாவால் ஓதும் இயல்பு பற்றி, “வழுத்தும் நாவகம் மணக்கும் மலர்” என்கின்றார். நாவால் ஓதுதலை “நாவகம் மணக்கும்” எனவும், மணம் கமழ்வதென்பதால் “மலர்” எனவும் உரைக்கின்றார். சிவக்கக் காய்ச்சிய பசுவின் பாலின் கண் சுவை மிக்குத் தோன்றுதலால், அச் சுவையோடொத்த சிவபிரானை, “பாலின் உள்ளினித் தோங்கிய சுவை” என்று பாராட்டுகின்றார். பத்தராயினார் மனத்தின்கண் வைத்துச் சிந்தித்து இன்புறுகின்றாராதலின், “பத்தர் தம்முளம் பரிசிக்கும் பழம்” என்று பரமனைப் பாடுகின்றார். சிந்தையில் வைத்து உணர்ந்தின்புறும் உயர்நிலையைப் “பரிசிக்கும்” என்று கூறுகின்றார். உருவில் பரம்பொருளை உருவுடையதுபோல் எண்ணி உள்ளத்தே கண்டு மகிழ்வது பற்றி இவ்வாறு உரைக்கின்றார். ஆல் - வெள்ளம். எல்லையற்றோங்கிய இன்பக்கடல் என்றற்கு “ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடல்” என்றும், அம்பலத்தில் நின்றாடும் காட்சி காண்பார்க்கு வற்றாத இன்பமாய் மகிழ்விப்பதுபற்றி, “அம்பலத்தில் ஆம் அமுதை” எனவும் அறிவிக்கின்றார். ஓதும் அந்தணர் நால்வகை வேதங்களையும் இசைக்கும் ஊராதலால் “வேதங்கள் நாலின் ஒற்றியூர்” என்றும், அங்கே கோயில் கொண்டமையின், “ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை” என்றும் உரைக்கின்றார்.
இதனால், மணியும் மலரும் சுவையும் பழமும் ஆனந்தக் கடலும் அமுதமாய் அமர்ந்து இன்பம் தரும் நமச்சிவாயத்தைத் தம்மால் மறக்கவியலாமையை வாய் விட்டுரைக்கின்றார். (4)
|