818.

     உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
          உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
     கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
          கடந்த மேலவர் கலந்திடும் உறவை
     எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
          யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
     நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
          நமச்சி வாயத்தை நான்மற வேனே.

உரை:

     உள்ளத்தில் நிறைந்தும் எனக்குத் தோன்றாவகை தன்னை மறக்கும் பேரொளியும், மிகைபட வுண்ணுந்தோறும் தெவிட்டாத தேனும், அகமும் புறமுமாகிய இருவகைக் கண்கட்கும் நிறைந்து ஒளிரும் காட்சிப் பொருளும், எத்தகைய நுண்பொருளையும் கடந்து விளங்கும் மேலோர் சென்று கலக்கும் உறவுப்பொருளும், எண்ணுந்தோறும் நிறைந்து தோன்றும் திருமால் பிரமன் முதலிய தேவர்கள் யாவரும் காண முடியாத இன்ப நிறைவும், திருவொற்றியூரை யடைந்து கோயில் கொண்டருளும் சிவபெருமானுமாகிய நமச்சிவாயத்தை நான் மறக்ககில்லேன். எ.று.

     உள்ளத்தே ஞானவொளியாய் விளங்கினும் ஆன்மாவின் காட்சிக்குப் புலனாகாமையின் சிவவொளியை, “உண்ணிறைந்து எனை ஒளித்திடும் ஒளி” என்றும், உலகில் பெறப்படும் தேன் வகையின் வேறானதென்றற்கு “உண்ணவுண்ணமேல் உவட்டும் நறவு” என்றும், காட்சி தருமிடத்துக் குறைவிலா நிறைவாய் விளங்குவது பற்றி, “கண்ணிறைந்த தோர் காட்சி” என்றும், ஞானயோகங்களால் உயர்ந்து சிவமாம் தன்மை எய்திய சான்றோர் சிவத்திற் கலந்தொழிவ ரென்பது தோன்ற, “யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை” என்றும் இயம்புகின்றார். எண்ணிக்கையில் நிறைந்தவர் என்றும், உயரிய எண்ணங்களால் நிறைந்தவர் என்றும், கொள்ளற் கொப்ப, “எண்ணிறைந்த மால்அயன் முதல் தேவர்” என்று கூறுகின்றார். இன்பத்தின் எல்லையை மக்களின் மேன்மையுற்ற தேவர் நுகர்ப என்ப; சிவ போகத்தை அவர் தாமும் கண்டிலர் என்றற்குத் “தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை” என இசைக்கின்றார்.

     இதனால், பேரொளியும் நறவும் காட்சியும் உறவும் இன்பநிறைவுமாய்ச் சிவமாய்த் திகழ்வது நமச்சிவாயம் என்பது பெறப்படும்.

     (5)