819. திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
உக்கு மாறினும் பெயல்இன்றி உலகம்
உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
உரை: திசைகள் பெயர்ந்து மாறினாலும், கடலேழும் திரண்டு நிலத்தின்மேற் சென்று பரவினாலும், வானத்தே நெடுந்தொலைவில் மின்னும் ஒளிகள் உதிர்ந்து வீழினும், மழையேயின்றி வற்றி உலகில் உணவுப் பொருள்களே இல்லாதொழியினும், எழுவகையாக நிலவும் உலகுகள் ஒன்றினொன்று மிகுந்து மாறினாலும், அண்டங்கள் யாவும் நிலை பிறழ்ந்து வீழ்ந்து கெடினும், வேதங்களால் இன்னனென்றுணரப்படாத நக்கனாகிய எம்பெருமானுடைய அருட்டிருப்பெயராகிய நமச்சிவாயத்தை நான் மறக்கமாட்டேன். எ.று.
வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என நிற்கும் திக்குகள் எட்டும் இடம் தலைமாறுவதில்லை; அவை மாறினும் என்புழி உம்மை எதிர்மறை. கடல்கள் எழுவகை என்பர்; புராணிகர் பால் தயிர் முதலாக கடல்கள் ஏழெனப் புனைந்துரைப்பர். சிவதருமோத்தரம், கந்தபுராணம் முதலிய நூல்கள் வேறு கூறும். இவை ஒன்றினொன்று பொங்கி மிகுந்து நிலவுலகிற் புகுவதில்லை; புகுந்தாற் பெருங்கேடாம். உப்பு நீர்க்கடல் அவ்வாறொருகால் பொங்கி யெழுந்து கரை கடந்து வந்ததாக சீர்காழித் தேவாரத் திருமுறைகள் தெரிவிக்கின்றன. வானத்தில் இரவிற் காணப்படும் நாள்மீன்கள் எண்ணிறந்தனவாயினும் அவற்றுள் ஞாயிறுகளும் பிறவும் பலவுண்டென்பர். அதுபற்றியே “சேண்வியங் கொளிகள்” எனப் பன்மை வாய்ப்பாட்டிற் கூறுகின்றார். பெயல் இல்லையாயின் உழவும் உணவுப் பயனும் இல்லையாதலை யுட்கொண்டு “பெயலின்றி யுலகில் உணவு மாறினும்” என வுரைக்கின்றார். புவிகள் என்றது நிலவுலகிலுள்ள கண்டங்கள் ஏழனையும் என்றலும் உண்டு. இவை கடல் சூழ்ந்து கிடப்பதால் தீவெனவும் வழங்கும். இவை நாவலம் தீவு, சாவகத் தீவு, குசத் தீவு, கிரவுஞ்சத்தீவு, சான்மலித்தீவு, கோமேதகத்தீவு, புட்கரத்தீவு என ஏழாம். இவற்றின் வேறாகச் சயினரும் புத்தரும் வேறு வேறு கற்பித்துக் கூறுவர். அண்டங்கள் ஆயிரத்தெட்டினும் மிக்கவை என்பர்; ஒவ்வொன்றும் முட்டை வடிவில் இருப்பது கொண்டு அண்டங்கள் எனப்பட்டன என்பர். மாணிக்கவாசகப் பெருமான் அண்டங்கள் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்பர். இவ்வண்டங்களையும் புவனங்களையும் படைத்தளித்த பரமன், அவற்றினுள், ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருப்பனாயினும் அவற்றின் இயல்பு கூறும் வேதங்களால் சிறிதும் தெளிய வுணரப்படான் என்பாராய். “வேதங்கள் உணரா நக்கன் என்பிரான்” என்று இயம்புகிறார். “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்” என்று மாணிக்கவாசகர் விளங்கக் கூறுகின்றார். சிவனுக்குள்ள பெயர்கள் எண்ணிறந்தனவாகும். அவற்றுள் நமச்சிவாய என்பது ஒன்றாகலின் “எம்பிரான் அருட்டிருப் பெயராம் நமச்சிவாயத்தை நான் மறக்கேனே” என்று உரைக்கின்றார்.
இதனால், இறைவனார் படைப்பில் இயற்கைக்கு மாறாய் யாது நடப்பினும் யான் அப் பெருமான் அருட்டிருப் பெயராகிய நமச்சிவாயத்தை மறக்கேன் என்று உரைக்கின்றார். (6)
|