5.
செழுஞ்சுடர் மாலை
இச்சொன்மாலை பாட்டுத் தோறும்
செழுஞ்சுடர் என்ற தொடரை ஈற்றிற் கொண்டு
இயன்றுள்ளமையின், செழுஞ்சுடர் மாலை என்ற பெயர்
கொண்டு இலங்குகிறது.
அறுசீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்
82. ஊணே யுடையே பொருளே யென்
றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்து கின்றேன்
வேறோர் துணை நின்னடியன்றிக்
காணே னமுதே பெருங் கருணைக்
கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகைமலை மருந்தே
தேனே ஞானச் செழுஞ்சுடரே.
உரை: நல்ல வுயரம் பொருந்திய தணிகை மலையில் எழுந்தருளும் மருந்து போல்பவனே, தேனே, ஞானச் செழுமையுடைய ஒளியே, அமுதமாகிய பெரிய அருட்கடலே, இனிய கனியே, கரும்பு போல்பவனே; உணவுக்கும் உடைக்கும் பொருளுக்கும் நினைவுகளைச் செலுத்தி மனத்தில் தடுமாற்றம் எய்தி வீணாகத் துயரத்தில் ஆழ்ந்து வருந்துகின்ற யான் உன்னை யொழிய வேறே ஒருவரும் துணை யாவாரைக் காண்கின்றேனில்லை; எனக்கு அருள் புரிக. எ. று.
சேண்-உயரம், நோய் நீக்கும் மருந்துகட்கு மிடமாதலின் முருகப் பெருமானை “மலை மருந்தே” என்கின்றார். மருந்து போல்வானை மருந்தே என்று சொல்லுகிறார். ஞானவொளி நிறைந்து உயிர்களின் அகவிருளும் புறத்தே உலகில் நிறைந்த பூத விருளையும் போக்குதல் தோன்ற “ஞானச் செழுஞ்சுடரே” என்று பராவுகின்றார். வற்றாது சுரக்கும் பேரருளாளனாதலால் “பெருங் கருணைக்கடலே” என்று புகழ்கின்றார். கனியும் கரும்பும் போல் இனியனாதல் விளங்கக் “கனியே கரும்பே” என்று கூறுகின்றார். மக்கள் படும் பாடனைத்தும் உண்டியையும் உடையையும் உறைவிட முதலிய பொருளையுமே இன்றியமையாதவையாகக் கொண்டு எண்ணிறந்த நினைவுகளைக் கொள்வதும், நினைந்தவை நினைந்தவாறு எய்தாவிடத்து மனம் கலங்கித் தடுமாற்றம் உறுவதும் நாளும் நிகழ்வதனால், “ஊணே யுடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி” என்றும், அத் தடுமாற்றத்தால் குற்றம் புரிந்து துயரப்படுவதும், அதனால் உறுபயன் ஒன்றும் விளையாமையும் கண்டு, “வீணே துயரத் தழுந்துகின்றேன்” என்றும் சொல்லுகின்றார், துயரம் மிக்கவழி மனவலியும் மெய்வலியும் குன்றிப் பிறருடைய துணை நாடப் படுவது பற்றி, “வேறோர் துணை நின்னடி யன்றிக் காணேன்” என்று விளம்புகின்றார். “நின்னடியன்றி” என்பதனால் துணை வேறு காணாது முருகன் திருவடியே துணையாவது என வுணர்ந்து கொண்டமை பெறப்படும்.
இதனால் முருகப் பெருமான் திருவடி யல்லது துணை வேறின்மை யுணர்ந்து பற்றிக் கொண்டது கூறியவாறாம். (1)
|