820. பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
உரை: தன்னைப் பெற்ற தாயைக் குழவி மறக்குமாயினும், தான் பெற்ற பிள்ளையைத் தாயே மறப்பளாயினும், தான் நின்றியங்குதற்கமைந்த தேகத்தை யுயிர் மறக்குமாயினும், தன்னை இயக்குகின்ற உயிரின் தன்மையை உடல் மறந்தொழியினும், தன்னை நன்கு கற்று நெஞ்சின்கண் நிலைபெறக்கொள்ளும் கலையுணர்வு அந்த நெஞ்சை மறக்குமாயினும், கட்பார்வைக்குக் காவலாய் அமைந்து மேலும் கீழும் சென்று இமைக்கும் இமைகளைக் கண்கள் மறந்தாலும், நல்ல தவத்தர்களான சான்றோர் திருவுள்ளத்திலிருந்து ஓங்கும் நமச்சிவாயம் என்ற திருப்பெயரை நான் மறக்ககில்லேன். எ.று.
தன்னைப் பெற்று வளர்த்த தாயை எந்தக் குழந்தையும் மறப்பதில்லை. விலங்கினத்துள்ளும் இவ்வியல்பு சிறந்து விளங்குதலைப் “பல்லாவுள் உய்த்துவிடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலை” (101) என்று நாலடியார் கூறுவது காண்க. தான் பெற்ற பிள்ளையை மறந்து கைவிடும் தாயாரும் உலகத்தில் இல்லை; பிள்ளையைத் துறந்த தாய்மனம் படும் பாட்டை நேரிற் காண்பார்க்குத்தான் தெரியும். “பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறாப் பேதை அறிவாளோ” என்பர் தாயுமானார். உயிர்க்கும் உடற்கும் உள்ள தொடர்பு பிரிவரும் பெருந் தொடர்பாதலை விளக்குவாராய், “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்” என்று உரைக்கின்றார். நோய் மிகுந்து உறுப்புக் குறைந்து உடற் பொலிவு குன்றிய போதும் உயிர் அதனை விடாது பற்றிப் பேணுவது ஒன்றே உடலின்பால் உயிர்க்குள்ள நட்பு இத்தன்மைத் தென விளக்குகின்றது. “இழத் தொறும் காதலிக்கும் சூதே போல் துன்பம் உழத்தொறும் காதற்றுயிர்” என்று திருவள்ளுவர் உரைப்பது காண்க. உயிர் நீங்கும் காலத்து உடல் படும் வேதனையால் அதற்கு அவ்வுயிர்பாலுள்ள அன்பு இனிது புலனாகும். கலை, ஈண்டுக் கல்விமேல் நிற்கிறது. கற்கும் கல்வி நிலைபெறும் உடல் என்பர்; உயிரை அடைதற்குக் கருவி மனம், மனத்தின் வாயிலாகவே கற்ற கல்வி உயிரின்கண் இடம்பெற்று, பிறவிதோறும் தொடர்கிறது; அக் கருத்துப் பற்றியே, “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து” என இசைக்கின்றார்கள். இத்தகைய கல்வி உயிரையடைதற்குக் கருவியாகிய நெஞ்சினை மறப்பதில்லை. கல்வியால் நெஞ்சு தூய்மை பெற்று இறைவன் உறைதற்கு இடமாகிறது. “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்று சான்றோர் கூறுப, நெஞ்சமும் தான் ஒன்றியிருந்து கற்ற கலையை மறப்பதில்லை. உடலுள்ள வரையில் உடன் இருந்து கற்றதை நினைப்பிப்பதில் மனம் பெரும் பணி புரிகிறது. இவற்றை நினைவிற் கொண்டு தான், “கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்” என மறவா மாண்பை எதிர்மறை எடுத்துரைக்கின்றார். கண்கட்குப் பாதுகாப்பாய் அடிக்கடி நீர் கொண்டு துடைத்துப் பார்வையைத் தூய்மை செய்வது இமை; மனவுணர்வின் தூண்டுதலின்றியே கண்ணிமை தன் பணியைச் செய்கிறது. உறங்கும் காலமொழிய எக்காலத்தும் இமைக்கும் பணியை இனிது செய்தலின், அதற்கு இணை இமையே தவிர வேறில்லை. அதனாற்றான் “கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்” என்று கூறுகின்றார். உடலில் உயிர் இருக்கும் அளவும் இமைத்தல் நிற்பதில்லை; இதனையும் நினைந்தே “கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்” எனக் கூறுகின்றார். முன்னைத் தவத்தால் நல்வினை முற்றிய நல்லோரை “நற்றவத்தவர்” என்றும், அவர்கள் நெஞ்சின்கண் நமச்சிவாயம் என்ற திருப்பெயர் இடையறவின்றி நினைக்கப்படுவது பற்றி “நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே” என்றும் உரைக்கின்றார்.
இதனால், உடலின்கண் மறவாமல் இயல்வன மறந்த வழியும் நமச்சிவாயம் என்ற அருட் பெயரை மறத்தல் இல்லை என்பது வற்புறுத்தியவாறு. (7)
|