821.

     உடைஉ டுத்திட இடைமறந் தாலும்
          உலகு ளோர்பசிக் குணமறந் தாலும்
     படையெ டுத்தவர் படைமறந் தாலும்
          பரவை தான் அலைப் பதுமறந் தாலும்
     புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும்
          பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும்
     நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும்
          நமச்சி வாயத்தை நான்மற வேனே.

உரை:

     ஒருவனுடைய இடை உடையை உடுக்க மறக்குமாயினும், உலகவர் பசித்தபோது உணவு கொள்ள மறப்பராயினும், போர்க் களத்தில் படை யேந்தினவர் அதைக் கையாள மறப்பராயினும், பரந்த கடலானது அலை யெழுவது மறந்த போதிலும், பக்கத் துணையாய் வந்தவர் தம்மை மறப்பராயினும், பொன்னைப் புதைத்து வைத்தவர் அப் புதையலிடத்தை மறந்தாராயினும், நடக்க லுற்றவர் வழியை மறந்தாராயினும் நமச்சிவாயத்தை நான் மறக்கமாட்டேன். எ.று.

     உடை யுடுத்தப் பழகியவர் இடை அதனை யுடுக்க ஒருபோதும் மறவாது என்பதைக் காட்டற்கு “உடை யுடுத்திட இடை மறந்தாலும்” என இடைமேல் வைத்துக் கூறுகின்றார். பசித்தபோது பிறர்பாற் சென்று இரந்தேனும் உணவு கொள்வது உலகவர் இயல்பு; பசிதான் ஏழை மக்கள் உள்ளத்தை மாற்றி இரக்கமற்ற அரக்கராக்குவது; அதன் மாறாத இயல்பை யுணர்த்தற்கு “உலகுளோர் பசிக்கு உணமறந்தாலும்” என உரைக்கின்றார். போர் மறவர் தாம் பயின்ற படையைக் கையிலேந்தியே களம் புகுவர்; பயிலாத படையை ஒருகாலும் கையில் எடார்; இதனைக்காட்டவே “படை யெடுத்தவர் படை மறந்தாலும்” என்று பகர்கின்றார். பரப்புடைய கடலைப் பரவை என்பது மரபு. உயரிய நெடுமலைத் தொடர்களால் நிலத்தில் காற்றுத் தடைப்படுவதுண்டு; கடலிடகத்தே அத்தகைய தடையேதுமின்மையின் காற்றினால் அலைகள் மலைபோல் எழுந்தடங்குவது இயல்பாதல் கூறுவாராய், “பரவை தான் அலைப்பது மறந்தாலும்” என்று கூறுகிறார். அலைப்பது, அலை யெழுந்தடங்குவது. பக்கத்தே துணையாக வருபவர் மறத்தல் இயல்பன்றென்பது பற்றி, “புடைய டுத்தவர் தமை மறந்தாலும்” என்று புகல்கின்றார். பொன்னைப் புதைத்து வைத்தவன் கணந்தோறும் வந்து பார்த்த வண்ணமிருப்பன்; ஒருபோதும் மறவான் என்பது விளங்கவே, “பொன்னை வைத்த அப்புதை மறந்தாலும்” என்று உரைக்கின்றார். நடக்கிறவன் நடக்கிற போதே வழியை மறவான்; மறப்பதும் இல்லை என்றற்கு “நடையடுத்தவர் வழி மறந்தாலும்” என நவில்கின்றார். நடை - தொழிற்பெயர்.

     இதனால், மறவா வியல்பினவாகிய செயல்கள் மறக்கப்படினும் நமச்சிவாயம் என்ற அருட்டிருப்பெயர் மறத்தற்குரியதன்று என்பது வற்புறுத்தவாறு.

     (8)