822.

     வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
          மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
     புதுமை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
          பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
     தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
          சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
     நன்மை என்பன யாவையும் அளிக்கும்
          நமச்சி வாயத்தை நான்மற வேனே.

உரை:

     வன்கண்மையைத் தோற்றுவிக்கும் வறுமை வந்தடையுமாயினும், மயக்கத்தை நல்கும் பெருவாழ்வு தோன்றினும், புன்மைத் தன்மையையுடைய மகளிரின் கூட்டம் எய்திய போதும், கூடுதலைப் பொருந்தினாலும், கூடுதற் பொருட்டுச் செவ்வி நோக்கி நின்றாலும், கூடுமிடம் பார்த்துச் சென்றாலும், பண்பில்லாதவருடைய நட்பு உண்டானாலும், நற்பண்பு நிறைந்த மேலோர் சார்பை நன்கு பெற்றாலும், உலகில் நல்லன எனப்படும் யாவற்றையும் இனிது நல்குவதாகிய நமச்சிவாயத்தை நான் மறக்கமாட்டேன். எ.று.

     ஒருவற்கு வறுமை எய்துமிடத்து இனிமைப் பண்பனைத்தும் கெட்டொழிதலும், கொடுமைக்குரிய நினைவும் செயலும் பிறவும் எளிதில் வந்து அமைதலும் கண்டு, “வன்மை செய்திடும் வறுமை வந்தாலும்” எனவும், செல்வம் பெருகிய வாழ்வு உண்டாகிய போது செருக்கும் மயக்கமும் தோன்றிப் பலரது மனநிறையைக் கெடுத்தலுண்மையின், “மகிழ்வுசெய் பெருவாழ்வு வந்தாலும்” எனவும் பேசுகின்றார். மகிழ்வு - மயக்கம். “மகிழ்ந்ததன்றலையும் நறவுண்டாங்கு” (குறுந்) என்று சான்றோர் உரைப்பர். அறத்தான் வரும் இன்பம் நோக்காது பிறவற்றால் எய்தும் காம நுகர்ச்சியை விரும்பும் மகளிரைப் “புன்மை மங்கையர்” என்றும், அவரது நட்பு உண்டாயவிடத்துப் பத்தி நெறியில் உள்ளத்தைப் படரவிடார் என்பது பற்றி, “புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும், நின்றாலும், சென்றாலும்” என்றும் அறிவுறுத்துகின்றார். புணர்ச்சி - நட்பு; கூடுதலுமாம். கூடுதற்கு மனம் பொருந்தினாலும், கூடலை விரும்பிக் காலம் கருதி நின்றாலும், இடமறிந்து சென்றாலும் நினைவு முற்றும் காம வின்ப வுணர்வே நிறைந்திருக்குமாதலால் இவற்றை எடுத்து அடுக்கிக் கூறுகின்றார். பண்பில்லாதவர் தொடர்பு நன்னெறிக்கண் செல்ல விடாதாகலின், “தன்மை யில்லவர் சார்பினை” என்று உரைக்கின்றார். நற்பண்புகள் நிறைந்த சான்றோர் தொடர்பு, உலகியற் புகழ் பொருள் முதலியன நோக்கிச் செல்லுமாற்றால் சிவன் திருப்பெயரை ஓதும் செந்நெறியை மறப்பிக்குமாதலால் அதனையும் விதந்து “சான்ற மேலவர் தமை அடைந்தாலும்” என்று இசைக்கின்றார்.

     இதனால், உலகியல் வாழ்வுக்குக் கேடு செய்பவரே யன்றி அதன் நலத்தின்கண் வீழ்த்திச் சிவத்தை மறப்பிப்பவரும் உண்டென்ப துணர்த்தியவாறு.

     (9)