823. இன்னும் பற்பல நாளிருந் தாலும்
இக்க ணந்தனி லேஇறந் தாலும்
துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
உரை: இனி மேலும் மிகப்பல நாள் வாழ வேண்டியிருந்தாலும், இக்கணத்திலேயே இறந்து போவதாயினும், நெருங்கி தேவருலக வாழ்வு பெறுவதாயிருப்பினும், தளர்வுற்று, பெரிய நரகத்தில் விழுந்து வருந்துவதாக இருப்பினும், மேலும் எத்தகைய துன்பம் இங்கே எனக்கு வந்ததாயினும், எம்பெருமானாகிய சிவபெருமான் எனக்கு யாது செய்தானாயினும் நல்ல நெஞ்சின்கண் நிலை பெற்றோங்கும் நமச்சிவாயம் என்ற திருவருட் பெயரை நான் மறக்கமாட்டேன். எ.று.
உலகிற் பிறந்து பன்னாள் கழிந்தமை யுணர்விற் கொண்டு இனி நீடிய வாழ்நாள் இல்லை என்ற எண்ணமுற்றுப் பேசுதலால், “இன்னும் பலநாள் இருந்தாலும்” என்றும், உடனே இறப்பு வரலாம் என்ற நம்பிக்கையோடு பேசுமாறு தோன்ற “இக்கணந்தனிலே இறந்தாலும்” என்றும் உரைக்கின்றார். நல்வினை செய்தார்க்குத் தெய்வ வாழ்வும், தீவினை செய்தார்க்கு நரக வாழ்வும் ஆம் என்ற பொது அறத்தை மேற்கொண்டு “துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்” என்றும் “சோர்ந்து மாநகரத் துழன்றாலும்” என்றும், சொல்லுகின்றார். நூல்களாலும் தொல்லோர் உரைகளாலும் தெரிய வந்தன முன்னே கூறிய வுண்மைகளேயாம்; இனி இவற்றின் வேறாக எத்தகைய இடர்கள் என்னைத் தனிநிலையில் தோன்றி வருத்தினும் யான், “நமச்சிவாயத்தை மறவேன்” என்பாராய், “என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும்” என்றும், நமச்சிவாயத்தை விடாப்பிடியாக யான் கொண்டது குற்றமெனினும் அஞ்சேன் என்றற்கு “எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்” என்றும் கூறுகின்றார். நமச்சிவாயம் என்ற திருப்பெயரின் இயல்பு தூய நெஞ்சுடையார் மனத்தின்கண் தோய்த்து மறவாமல் நிற்பது என்பதை வலியுறுத்தற்கு, “நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும் நமச்சிவாயம்” என்று இயம்புகின்றார்.
இதனால், நமச்சிவாயம் என்ற சிவபெருமான் திருப்பெயர் நெஞ்சு தூயராயினர் இருக்குமிடம் நாடிச் சென்று அவர் மனத்தின்கண் நின்றோங்கும் நீர்மையுடையது என்பதாம். (10)
|