825. வண்ணப்பல் மாமலர் மாற்றும்
படிக்கு மகிழ்ந்தெமது
திண்ணப்பர் சாத்தும் செருப்படி
மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
உண்ணப் பரிந்துநல் ஊன்தர
உண்டுகண் ஒத்தக்கண்டே
கண்ணப்ப நிற்க எனக்கைதொட்
டார்எம் கடவுளரே.
உரை: முடிமேல் அணியப்பட்டிருந்த அழகிய பல பெரிய மலர்களை மாற்றுதற்காக மனமகிழ்வுடன் எம் அன்புக்குரிய திண்ணப்பர் வைக்கின்ற செருப்பணிந்த திருவடியை உவகையுடன் ஏற்றுக்கொண்டு இனிய சுவையுடையதாகலின் உண்க எனப் பரிவுடன் நல் ஊனுணவு தருதலும் மறாது உண்டு பின் இறைவன் கண்ணில் ஊறு தோன்றக் கண்டு தன் கண்ணைப் பிடுங்கி மெல்ல வைத்து ஒத்தக்கண்டு மனம் தரியாமல் ‘கண்ணப்பர் நிற்க’ என்று வாயாற் சொல்லிக் கையாற் பற்றித் தடுத்த பெருமான் எமக்குக் கடவுளாகும் சிவபெருமானார். எ.று.
சிவகோசரியார் புனைந்திருந்த பல்வேறு அழகிய இனிய மலர்களைக் கண்டு அவற்றை நீக்குதல் வேண்டித் திண்ணப்பர் வேறு கருவியின்மையில் செருப்பணிந்த காலால் மாற்றினமை புலப்பட வேண்டி, “வண்ணப்பன் மாமலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்தெமது திண்ணப்பர் சாத்தும் செருப்படி” என்று அடிகளாற் உரைக்கின்றார். பல்வேறு வண்ணமும் வடிவும் மனமும் உடைய மலர்கள் எனக் குறித்தற்கு “வண்ணப்பன் மாமலர்” என்றும், ஒரு கையில் அம்பும் ஒரு கையில் ஊனுணவு நிறைந்த கல்லையும் கொண்டிருந்தமையின், மலர்களை மாற்றற்குச் செருப்பணிந்த திருவடியில் ஒன்று இனிது வாய்த்தமையின், “மாற்றும் படிக்கு” என்றும், செருப்பாயிற்றே என்று அருவருப்புறாது இறைவன் உவந்து ஏற்றுக்கொண்ட திறத்தை, “மகிழ்ந்து மேற்கொண்டு” என்றும் இயம்புகின்றார். அன்புரிமை தோன்ற “எமது திண்ணப்பர்” என்றும், செருப்பை இடையறவின்றி யணியும் வேட்டுவரினத்தவராகலின், அவர் காலடியைச் “செருப்படி” என்றும், செருப்படியால் ஒதுக்கும் செயலைப் பட்டாங்கு மொழியாது சீலம் பற்றி, “சாத்தும் செருப்படி” என்றும் கூறுகின்றார். தேன் கலந்து சுவையூட்டித்தித்திக்கும் என மொழிந்து உண்பித்த செய்தி புலப்பட, “தீஞ் சுவைத்தாய் உண்ணப் பரிந்து நல்ஊன் தர” என்றும், இறைவன் மறாது உண்டதை “உண்டு” என்றும் உரைக்கின்றார். சேக்கிழார் பெருமானும், “முடிமிசை மலரைக் காலில் வளைத்த பொற் செருப்பால் மாற்றி” என்றனர்; நக்கீரதேவர், “பூசனை தன்னைப் புக்கொரு காலில் தொடு செருப்படியால் நீக்கி” என வுரைத்தனர். ஊனுணவை யுண்பித்த திறத்தை, “இது முன்னையின் நன்றால் ஏனமொடு மான்கலைகள் மரைகடமை யிவையிற்றில், ஆனவுறுப்பிறைச்சி யமுது அடியேனும் சுவை கண்டேன். தேனுமுடன் கலந்தது இது தித்திக்கும் என மொழிந்தார்” (கண். 150) என மொழிவது காண்க. திண்ணப்பர் தமது கண்ணைப் பிடுங்கி அப்பியபோது சிவபெருமான் “நில்லு கண்ணப்ப” என்று சொல்லித் தமது திருக்கையால் அவரது கையைப்பற்றித் தடுத்தனர். இதனைச் சேக்கிழார், “திருக்காளத்தி அற்புதர் திருக்கை அன்பர் தங்கண்முன் இடக்கும் கையைத் தடுக்கும் மூன்றடுக்கு நாக கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்றே” என உரைத்தருள்கின்றார். நக்கீரத்தேவர், “நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப என்று, இன்னுரையதனோடும் எழிற் சிவலிங்கம், தன்னிடைப் பிறந்த தடமலர்க்கையால் அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்து அருளினன் அருளலும், விண்மிசை வானவர் மலர்மழை பொழிந்தனர்” என இயம்புகின்றார். இறைவன் கையால் தொட்டுத் தடுத்த அருட்செயல் அருமை யுடைத்தாதல் பற்றி, “கைதொட்டார் எம் கடவுளரே” என மனமகிழ்ந்து பாடுகின்றார்.
இதனால், கண்ணப்ப நாயனார்க்குச் சிவபெருமான் அருள் வழங்கிய திறம் விளங்க வுரைத்தவாறு. (2)
|