826. செல்இடிக் கும்குரல் கார்மத
வேழச் சினஉரியார்
வல்அடுக் கும்கொங்கை மாதொரு
பாகர் வடப்பொன்வெற்பாம்
வில்எடுக் கும்கையர் சாக்கியர்
அன்று விரைந்தெறிந்த
கல்லடிக் கும்கதி காட்டினர்
காண்எம் கடவுளரே.
உரை: கருமேகத்தில் தோன்றும் இடியின் ஓசையும் கரிய நிறமும் மதம் பொழியும் இயல்பும், வெகுளியும் உடைய யானையின் தோலையுரித்துக் கொண்டவரும், வல்லை யொக்கும் கொங்கைகளை யுடைய மங்கையைப் பங்கிலே யுடையவரும், வடதிசைக்கண் உள்ள பொன்மலையாகிய வில்லை யேந்தும் கையையுடையவருமாகிய சிவபெருமானார், அந்நாளில் சாக்கியனார் கல்லையெடுத்து விரைந்து எறிந்த கல்லடியையும் மகிழ்ந்தேற்றுச் சிவகதி காட்டினாராகலின் அவர் எமக்குக் கடவுளராவார். எ.று.
செல், ஈண்டு மழை மேகம். கார் வேழம், மத வேழம் என இயைக்க, சினம் என்பதை வேழத்தொடு கூட்டி, சினவேழ வுரியர் எனப் பொருள் உரைக்க. கயவடிவில் உலகிற்குத் தீங்கு செய்த கயாசுரனைச் சிவன் வென்று தோலையுரித்துப் போர்வையாகக் கொண்ட வரலாறு இதனால் குறிக்கப்படுகிறது. வல் - சூதாடு காய்; மகளிர் கொங்கைக்கு அதனை ஒப்புக் கூறுவது மரபு. பொன் வெற்பு - பொன் மலை. சிவத்தின் பரமாம் தன்மையையுணர்ந்து, சிவலிங்கமாவது, “காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய், நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்” என்று தேர்ந்து, “நாடோறும் சிவலிங்கம் கண்டுண்ணும்” கொள்கை யுடையவர் சாக்கிய நாயனார், முதனாட் சிவலிங்கமொன்றைக் கண்டதும் களிப்பு மிகுதியால் இன்னது செய்கிறோமென எண்ணாது எதிரிற் கிடந்த கல்லையெடுத்துப் பூவென்ற நினைவால் சிவலிங்கத்தின் மேல் எறிந்து வழிபட்டார். பின்னர் சிவலிங்கத்தின்மேல் கல்லெறிவதையே அருச்சனையாகச் செய்து வழிபட்டு முடிவில் சிவகதி பெற்றார். இக் குறிப்பையே, “சாக்கியர் அன்று விரைந்தெறிந்த கல்லடிக்கும் கதி காட்டினர்” என்று கூறுகின்றார். மேருமலை பொன்னிறமுடைமை பற்றிப் பொன்மலை எனப்படும். இந்நாளையோர் அதனைக் காஞ்சன சிருங்கம் என்று கூறுகின்றார்கள். திரிபுரம் எரித்த காலையில் மேருமலை வில்லாக வளைக்கப்பட்டமை புலப்பட, “வடப்பொன் வெற்பாம் வில்லெடுக்கும்கையர்” எனச் சிவபெருமானைச் சிறப்பிக்கின்றார்.
இதனால், சாக்கிய நாயனார்க்குச் சிவகதி வழங்கிய அருளிப்பாடு விளக்கப்படுகிறது. (3)
|