827.

     ஏழியல் பண்பெற் றமுதோ
          டளாவி இலங்குதமிழ்க்
     கேழியல் சம்பந்தர் அந்தணர்
          வேண்டக் கிளர்ந்தநற் சீர்
     வீழியில் தம்பதிக் கேவிடை
          கேட்கவெற் பாள்உடனே
     காழியில் தன்னுருக் காட்டின
          ரால்எம் கடவுளரே.

உரை:

     எழுவகைப் பண்களையுடைத்தாய், அமுதம் கலந்து விளங்கும் தமிழின் இயலையுடைய திருஞான சம்பந்தர் திருவீழி மிழலையில் இருப்பதறிந்து போந்த சீர்காழி யந்தணர்கள் அவரைத் தமது காழிக்கு எழுந்தருள வேண்டுமென்று பணிந்து வேண்டினராக, வீழிப்பெருமான் அருள்விடை பெற்று வருவதாகச் சொன்ன சம்பந்தப் பெருமானுக்கு அன்றிரவே வீழியிலேயே காழியில் உமையாளொடும் வீற்றிருக்கும் கோலத்தைக் காட்டிய பெருமானே எமக்குக் கடவுளராவார். எ.று.

     தமது திருப்பாட்டை “ஏழ் இன்னிசைமாலை” என்றும், “பண்பொலி செந்தமிழ் மாலை” என்றும், (1872, 1992) ஞானசம்பந்தரே கூறுதலின், “ஏழியல் பண்பெற்”றென்றும், “ஞானசம்பந்தன் தேன்மொழி மாலை” (3689) என்றும் கூறுதலால், “அமுதோ டளாவி இலங்கு தமிழ்க் கேழியல் சம்பந்தர்” என்றும் வடலூர் அடிகள் வனைந்துரைக்கின்றார். பண்கள் எழுவகை யிசையால் ஆவது பற்றி, “ஏழியல் பண்” என்று இசைக்கின்றார். ஏழாவன குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம், கரு நாடகத்தார், சட்சம், எருது, காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் எனவுரைத்து, இவற்றின் முதலெழுத்துக்களான சரிகமபதநி என்ற ஏழையும் இசையின் சுரமாகக் கொண்டதோடு, எருது முதல் நிடாதம் ஈறாகவுள்ள ஆறும் பிறத்தற்கு அடியோசையாகவுள்ள குரலைச் சட்சம் என இயைத்து முதற்சுரமாகக் கொண்டனர், படித்தற்கும் கேட்டதற்கும் சிந்தித்தற்கும் இனிமையும் மேன்மையும் கொண்டிருத்தலால், “அமுதோ டளாவி இலங்குதமிழ்” என்று வள்ளலார் புகழ்ந்துரைக்கின்றார். அந்தணர் எனப் பொதுப்பட மொழிந்தாரேனும், ஈண்டுச் சீர்காழியிலிருந்து வீழிமிழலைக்கு வந்திருந்த அந்தணர்களை என அறிக, அவர்களைச் “சண்பைத் திருமறையோர்” (பெரியபு. 2455) எனவே சேக்கிழாரும் தெரிவிக்கின்றார். வீழியில் இறைவனைப் பரவிச் சீர்காழிக் கேகவும், ஆங்கே தமக்குக் காட்சி தந்தருளவு ஞானசம்பந்தர் வேண்டினமையின், வீழியில், “தம்பதிக்கேவிடை கேட்க” என்று இயம்புகின்றார். சம்பந்தப்பெருமானுக்கு அன்றிரவே வீழிமிழலையிலேயே உமையொடு கூடிய தமது அழகிய காட்சியை விண்ணிழி கோயில் என்ற வீழித் திருக்கோயிலில் தந்தருளினார் என்ற வரலாற்றை “வெற்பானாடனே காழியில் தன்னுருக் காட்டினரால் எம் கடவுளரே” என்று வள்ளற்பெருமான் உரைக்கின்றார். சேக்கிழார் பெருமானும், “தோணியில் நாம் அங்கிருந்த வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள், சேணுயர் விண்ணின்றிழிந்த இந்தச் சீர்கொள் விமானத்துக் காட்டுகின்றோம் பேணும்படியால் அரிதி” (பெரிய. 2458) என உரைத்தருள்கின்றார்.

     இதனால் காழி யந்தணர் விரும்பியவாறு, திருவீழிமிழலையில் விண்ணிழிக் கோயிலில், திருஞானசம்பந்தர்க்காகச் சீர்காழித் தோணியப்பராய்க் காட்சி தந்த அருட்செயல் விளக்கப்பட்டவாறாம்.

     (4)