828. நாட்டில் புகழ்பெற்ற நாவுக்
கரசர்முன் நாள்பதிகப்
பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம்
பிரான்எனப் பாட அன்றே
ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி
வேதம் அமைத்தமறைக்
காட்டில் கதவம் திறந்தன
ரால்எம் கடவுளரே.
உரை: தமிழகத்தில் நிலைத்த புகழ் பெற்ற திருநாவுக்கரசர், முன்னாளில் தாம் பாடிய பதிகத்தின்கண் ஒரு பாட்டில், “இரக்கம் ஒன்றில்லீர் எம்பெருமானே” என்று பாட, அப்பொழுதே அம்பலத்தே ஆடற்கு அமைந்த திருவடி மலரை மறைக்காட்டில் வேதங்களை வாழ்த்தி அடைந்த கதவுகளைத் திறப்பித்தனர் எமக்குக் கடவுளாகிய சிவபிரான். எ.று.
நாடு - தமிழகம். தமிழ்நாடெங்கும் ஊர்தோறும் சென்று சிவபெருமானைத் திருப்பதிகங்கள் பாடிச் சிறப்பிக்குமாற்றல் அழியாப் புகழ் கொண்டவராகலின் நாவுக்கரசரை, “நாட்டில் புகழ்பெற்ற நாவுக்கரசர்” என்று பாராட்டுகின்றார். திருமறைக்காட்டிற்குத் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் சென்றிருந்தகாலை மறைகள் அடைத்த திருக்கதவங்களைத் திறக்க வேண்டுமென்ற ஊரவர் விருப்பறிந்து, ஞானசம்பந்தர் நாவரசரை நோக்கி, “அப்பரே வேதவனத்தையர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே, எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும், நீரே இவ்வாயில் திருகாப்பு நீங்குமாறு மெய்ப்பொருள் வண்தமிழ் பாடியருளும்” என்று வேண்டினர். திருநாவுக்கரசர், “பண்ணின்நேர் மொழியாளுமை பங்கரோ” எனத் தொடங்கும் திருப்பதியம்பாடி, முடிவுகாறும் திறக்கப்படாமை நினைத்து, “அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர், இரக்கம் ஒன்றிலிர் எம்பெருமானிரே” என்ற திருப்பாட்டைப் பாடவும் மறையடைத்த கதவுகள் திறந்தன. பதியம் முடியுங்காறும் கதவு திறக்கப்படாமையைப் “பைம்பொன் வாயிற் சேடுயர் பொற் கதவு திருக்காப்பு நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து நீடுதிருக்கடைக்காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட” என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். “திருக்கடைக்காப்பில் அரிது வேண்டி நின்று” என்று சேக்கிழார் அருளிய குறிப்புக்கு வடலூர் வள்ளல் விளக்கம் கூறலுற்று, “பதிகப் பாட்டிற்கு இரக்கம் இல்லீர் எம்பிரான் எனப்பாட” எனவுரைக்கின்றார். பாட்டிற் கென்றாராயினும் ஏழாவது விரித்துப் பாட்டின்கண் என்று பொருள் கூறுக. இறைவன் திருவடி ஞானகாயத்துச் சிந்தையம்பலத்துத் திருநடம் புரியும் சிறப்புடைத்தாதல் தோன்ற, “ஆட்டிற்கிசைந்த மலர் வாழ்த்தி” என்றும், வேதியர் அடைத்த கதவை “வேதம் அடத்த கதவம், மறைக்காட்டிற் கதவம் திறந்தனரால்” என்றும் செப்புகின்றார்.
இதனால், திருமறைக் காட்டில் திருநாவுக்கரசர்க்கு அருளுதல் வேண்டி மறைக்கதவம் திறந்த அருட்செய்தி விளக்கப்படுகிறது. (5)
|